வெளியேறும் கழிவுநீரால் மாசுபடும் அணை நீர்: ஊட்டியில் தனியார் தொழிற்சாலை மின் இணைப்பு துண்டிப்பு


வெளியேறும் கழிவுநீரால் மாசுபடும் அணை நீர்: ஊட்டியில் தனியார் தொழிற்சாலை மின் இணைப்பு துண்டிப்பு
x
தினத்தந்தி 30 Jun 2018 4:30 AM IST (Updated: 30 Jun 2018 12:03 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் அணை நீரில் மாசு ஏற்படுவதாக கூறி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அந்த தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்தனர்.

ஊட்டி,

மருத்துவத்துக்கு கேப்சூல் தயாரிக்க ஜெலட்டின் என்ற மூலப்பொருள் அவசியமாகும். ஜெலட்டின் தயாரிக்க மத்திய அரசு மும்பை, புனே, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகளை தொடங்க அனுமதி அளித்தது. வெளிநாடுகளில் இருந்து ஜெலட்டின் இறக்குமதி செய்ய கடினமாக இருந்ததால், உள்நாட்டிலேயே தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. கடந்த 1969–ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் ஊட்டி–கூடலூர் சாலையில் சாண்டிநல்லா என்ற இடத்தில் அதற்கான தனியார் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த 1972–ம் ஆண்டு இந்த தொழிற்சாலை ஜெலட்டின் உற்பத்தியை தொடங்கியது. ஜெலட்டின் மூலப்பொருளில் புரோட்டீன் கலந்து இருந்ததாலும், ஊட்டச்சத்து அதிகமாக இருந்ததாலும் விபத்துக்கான மருத்துவ சிகிச்சைக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான பானங்களில் பவுடராகவும் சேர்க்கப்பட்டது. இந்த தொழிற்சாலையை புரோட்டீன் தயாரிப்பு நிறுவனமும், டாட்டா நிறுவனமும் நடத்தி வந்தது. விலங்குகளின் எலும்புகளை கொண்டு ஆசிட் மூலம் தூய்மை செய்து, அதில் இருந்து கிடைப்பதை ஜெலட்டினாக தயாரிக்கின்றனர். நாடு முழுவதும் மருந்து, மாத்திரைகள் தயாரிக்க ஜெலட்டின் மிகவும் அத்தியாவசியமாக இருந்தது.

இந்த நிலையில் ஊட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ஆசிட் கலந்த கழிவுநீர் தொழிற்சாலையிலேயே எந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு, பின்னர் அந்த நீர் பைக்காரா அணையில் விடப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பைக்காரா அணையில் இருந்து கடநாடு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கப்பட்டு, கடநாடு, உல்லத்தி உள்பட 140 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் பைக்காரா அணை தண்ணீரில் மாசு ஏற்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

அதன் அடிப்படையில், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நீரை எடுத்து, சோதனை செய்தனர். சோதனையில் நீரில் மாசு உள்ளதாகவும், முழுமையாக ( 0 சதவீதம்) மாசு இல்லாத நீராக சுத்திகரித்து அணையில் விட வேண்டும் என்றும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலைக்கு நோட்டீசு அனுப்பியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உத்தரவின்படி, அந்த தொழிற்சாலை இயங்க வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனால் தொழிற்சாலையில் ஜெலட்டின் உற்பத்தி முடங்கியது. தொழிற்சாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அங்கு 35 டன் மூலப்பொருள் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் உற்பத்தி செய்யப்பட்ட ரூ.1½ கோடி மதிப்பிலான ஜெலட்டின் தொழிற்சாலையில் இருந்து வெளியே கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.


Next Story