700 தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிப்பு: தொழிற்சாலை தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


700 தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிப்பு: தொழிற்சாலை தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 30 Jun 2018 4:45 AM IST (Updated: 30 Jun 2018 12:14 AM IST)
t-max-icont-min-icon

தனியார் தொழிற்சாலை தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சுந்தரராஜன் பேட்டி அளித்தார்.

ஊட்டி,

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவுப்படி, ஊட்டி அருகே செயல்பட்ட தனியார்பயோடெக் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அங்கு உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு நேற்று அனைவரும் ஒன்று திரண்டனர். பின்னர் ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சுந்தரராஜன் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் சதீஷ், மூர்த்தி மற்றும் தொழிலாளர்கள் 200–க்கும் மேற்பட்டோர் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு வந்தனர். அங்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதன் பின்னர் ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 45 ஆண்டு காலமாக ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த மாவட்டத்தில் எந்தவித வேலைவாய்ப்பும் இல்லாத நேரத்தில் தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. தற்போது 300 நிரந்தர தொழிலாளர்களும், 400 தற்காலிக தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர். உற்பத்தி நிறுத்தப்பட்டதால் தொழிற்சாலைக்கு மூலப்பொருள் வினியோகம் செய்யும் நிறுவனங்களில் பணிபுரியும் 500–க்கு மேற்பட்ட தொழிலாளர்களும் மறைமுகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நீரை 0 சதவீதமாக மாசு இல்லாமல் சுத்திகரிக்க ஜப்பான் நாட்டில் இருந்து நவீன எந்திரத்தை இறக்குமதி செய்ய நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு 8 மாதம் கால அவகாசம் தேவை என்பதால், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் விவரமாக எடுத்து கூறி உள்ளோம். தொழிற்சாலை மூடப்பட்டால் 700 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, தொழிற்சாலை தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:–

சம்பந்தப்பட்ட தனியாருக்கு சொந்தமான பயோடெக் தொழிற்சாலை நிர்வாகம் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்தாத காரணத்தால் நீதிமன்றம் மூலம் தொழிற்சாலை வங்கியின் கீழ் கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் 0 சதவீதமாக சுத்திரிக்கப்பட்டு பைக்காரா அணையில் விட வேண்டும். இந்த அணையில் இருந்து 140 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அணை நீரில் மாசு ஏற்படாமல் இருக்க ஏற்கனவே 6 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தொழிற்சாலை நிர்வாகத்துக்கு நோட்டீசு கொடுக்கப்பட்டது.

அதன் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறி, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்து உள்ளனர். தற்போது இந்த தொழிற்சாலையில் உள்ள அமிலம் உள்ளிட்ட ரசாயன பொருட்களால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாசு கட்டுப்பாடு வாரிய செயற்பொறியாளர் நளினி, தொழிற்சாலை ஆய்வாளர் தங்கதுரை, ஊட்டி தாசில்தார் தினேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு தொழிற்சாலையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டு உள்ளேன். தொழிற்சாலை இயங்குவது குறித்து மாசு கட்டுப்பாடு வாரிய தலைவரின் உத்தரவு பெற்ற பின்னரே மீண்டும் இயங்க முடியும். தற்போது பைக்காரா அணையில் இருந்து வினியோகம் செய்யப்படும் குடிநீரில் பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story