குளியலறையில் உடல் கருகி பிணமாக கிடந்த 90 வயது மூதாட்டி தற்கொலையா? போலீசார் விசாரணை


குளியலறையில் உடல் கருகி பிணமாக கிடந்த 90 வயது மூதாட்டி தற்கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Jun 2018 3:30 AM IST (Updated: 30 Jun 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் வீட்டு குளியலறையில் உடல் கருகிய நிலையில் 90 வயது மூதாட்டி பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஒழுகினசேரி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி குப்பம்மாள் (வயது 90). சுப்பிரமணியன் இறந்துவிட்டார். குப்பம்மாள் தன் மகள் வள்ளியம்மாள் வீட்டில் தங்கி இருந்தார். வீட்டின் மாடியில் வள்ளியம்மாள் தன் குடும்பத்துடன் வசிக்கிறார். கீழ் பகுதியில் குப்பம்மாள் வசித்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வள்ளியம்மாள் குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றார். அப்போது அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏன் எனில் குளியலறையில் உடல் கருகிய நிலையில் குப்பம்மாள் பிணமாக கிடந்தார். உடனே இதுபற்றி கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டபோது மண்எண்ணெய் வாடை வீசியது. உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பினர்.

குளியலறையில் பிணமாக கிடந்த குப்பம்மாள் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story