‘தியாகிகளை தேடிச் சென்று ஓய்வூதியம் வழங்க வேண்டும்’ மத்திய–மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


‘தியாகிகளை தேடிச் சென்று ஓய்வூதியம் வழங்க வேண்டும்’ மத்திய–மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 Jun 2018 4:15 AM IST (Updated: 30 Jun 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

‘சுதந்திர போராட்ட தியாகிகளை தேடிச்சென்று ஓய்வூதியம் வழங்க வேண்டும்’ என்று, மத்திய–மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்தவர் பி.எஸ்.பெரியய்யா (வயது 91). இவர் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் அனுபவித்தவர். இவர் தியாகிகளுக்கான தமிழக அரசின் ஓய்வூதியம் பெற்றார். மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் ஓய்வூதியம் கேட்டு இவர் அளித்த மனுவை மதுரை மாவட்ட கலெக்டர் நிராகரித்து 2013–ம் ஆண்டில் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக தியாகி பெரியய்யா மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். திடீரென அவர் இறந்துவிட்டார். அவருடைய சட்டப்பூர்வமான வாரிசுகள் வழக்கை தொடர்ந்து நடத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி, ‘பெரியய்யாவுக்கு மத்திய அரசின் தியாகிகள் ஓய்வூதியம் வழங்க வேண்டும்’ என்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய உள்துறைச் செயலாளர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.ரவிச்சந்திரபாபு, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

சுதந்திர போராட்ட தியாகி பெரியய்யா, மாநில அரசின் தியாகிகள் ஓய்வூதியம் பெற்று வருகிறார். சுதந்திர போராட்டங்களில் ஏராளமானவர்கள் சுயநலமின்றி பங்கேற்று நாட்டை காலனி ஆதிக்கத்தின் பிடியில் இருந்து மீட்டுள்ளனர். அவர்களின் போராட்டத்தால் தான் நாம் சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடிகிறது.

அப்படிப்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கும் போது அதை தொழில்நுட்ப ரீதியாகவும், மூடிய கண்களுடனும் அணுகக்கூடாது. நாட்டுக்காக பாடுபட்ட தியாகிகளை கவுரவிப்பது நமது கடமை. தியாகிகள் தங்களுக்கு ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பிக்கும் வரை காத்திருக்காமல், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தேடிக்கண்டுபிடித்து, ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

எனவே மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. பெரியய்யாவுக்கு தியாகிகள் ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான ஆவணங்களை 4 வாரத்தில் தமிழக அரசுக்கு மதுரை கலெக்டரும், அதை மத்திய அரசுக்கு 6 வாரத்தில் மாநில அரசும் அனுப்ப வேண்டும். மனுதாரர்களுக்கு மத்திய அரசு 8 வாரத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.


Next Story