205 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் கதிரவன் வழங்கினார்


205 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் கதிரவன் வழங்கினார்
x
தினத்தந்தி 29 Jun 2018 11:00 PM GMT (Updated: 29 Jun 2018 7:51 PM GMT)

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 205 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கதிரவன் வழங்கினார்.

தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை வட்டம் அஞ்செட்டி அருகே உள்ள தொட்ட மஞ்சு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ் வரவேற்று பேசினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர். முகாமில் 205 பயனாளிகளுக்கு ரூ.39 லட்சத்து 6 ஆயிரத்து 160 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், மலை கிராமங்களை சேர்ந்த பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் 2 பெண் குழந்தைகள் மட்டுமே இருந்தால் தமிழக அரசு குழந்தைகள் பெயரில் நிதி உதவி வழங்கி வருகிறது. மலை கிராமங்களில் குழந்தை திருமணங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இளைஞர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு மினி ஜீப் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மலைவாழ் மக்கள் தங்கள் குழந்தைகளை கல்வி கற்க ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

இந்த முகாமில் தனி துணை கலெக்டர் சந்தியா, பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் வேலாயுதபெருமாள், வேளாண்மை துணை இயக்குனர் மோகன் விஜயகுமார், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, தாட்கோ மேலாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் தேன்கனிக்கோட்டை தாசில்தார் மணிமொழி நன்றி கூறினார்.

Next Story