விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்; 127 பேர் கைது
புதுவை அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பாலம் பணியை விரைந்து முடிக்கக்கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 127 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூலகுளம்,
புதுச்சேரி–விழுப்புரம் சாலை அரும்பார்த்தபுரத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு மிகவும் மந்தமாக பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டுமென வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று அந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அமுதவன், செல்வநந்தன், எழில்மாறன், ஆதவன், ரமேஷ், தமிழ்வளவன், சந்துரு, செல்வி மற்றும் கட்சி தொண்டர்கள் மூலகுளம் பஸ் நிறுத்ததில் ஒன்று திரண்டனர்.
பின்னர் அவர்கள் புதுச்சேரி–விழுப்புரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் ரெயில்வே மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் போலீசார் சமாதானத்தை ஏற்க மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே லேசான வாக்குவாம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 27 பெண்கள் உள்பட 127 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.