எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு இளம்பெண் உள்பட 2 பேர் பலி


எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு இளம்பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 30 Jun 2018 4:30 AM IST (Updated: 30 Jun 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே, எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு இளம்பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ஆவடி,

அம்பத்தூரை அடுத்த ஒரகடம் சம்பத் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மகள் ஹேமலதா (வயது 18). இவர், பிளஸ்–2 படித்து முடித்துவிட்டு, கடந்த 10 நாட்களாக அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

நேற்று காலை 8 மணியளவில் வழக்கம்போல் ஹேமலதா தனது வீட்டில் இருந்து வேலைக்கு சைக்கிளில் சென்றார். அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே உள்ள சைக்கிள் நிறுத்தும் இடத்தில், தனது சைக்கிளை நிறுத்திவிட்டு, ரெயில் நிலையத்துக்கு தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கிச்சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஹேமலதா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரும் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது அவரும் அதே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு, அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

பலியான அவர் யார்?, எந்த ஊர்? என்பது தெரியவில்லை. கருப்பு நிற பேண்ட் மட்டும் அணிந்திருந்ததாக தெரிகிறது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி ரெயில்வே போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இளம்பெண் உள்பட 2 பேர் அடுத்தடுத்து எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு இருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story