கடன் தொல்லையால் தாய், தூக்குப்போட்டு தற்கொலை, மகனும் அதே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை


கடன் தொல்லையால் தாய், தூக்குப்போட்டு தற்கொலை, மகனும் அதே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 Jun 2018 5:00 AM IST (Updated: 30 Jun 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

கடன் தொல்லையால் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால், துக்கம் தாங்காமல் அவருடைய மகனும் அதே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் தணிகாசலம் நகர்,  இ.பிளாக் சாரங்கபாணி தெருவில் வசித்து வந்தவர் இந்திராணி(வயது 50). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவருடைய கணவர் பிரித்திவிராஜ், கடந்த ஜனவரி மாதம் இறந்து விட்டார்.

இவர்களுடைய  மகன் தியாகராஜன்(25), சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மகள் உமாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார்.

இந்திராணி, தனது மகன் தியாகராஜனுடன் தனியாக வசித்து வந்தார். தனது கணவர் இறந்த சோகத்திலும், கடன் தொல்லையாலும் இந்திராணி மிகவும் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

கடந்த 27–ந்தேதி தியாகராஜன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இந்திராணி மட்டும் தனியாக இருந்தார். வேலை முடிந்து இரவில் வீட்டுக்கு திரும்பி வந்த தியாகராஜன், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது தனது தாய் இந்திராணி, தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் தூக்கில் தொங்கிய தாயின் உடலை கீழே இறக்கி வைத்தார். தாயின் உடலை பார்த்து கதறி அழுத தியாகராஜன், தாய் இறந்த துக்கம் தாங்காமல் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக வீட்டின் கதவை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டார்.

பின்னர் தனது தாய் தற்கொலை செய்து கொண்ட அதே கயிற்றில் தியாகராஜனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்றுமுன்தினம் காலை முதல் உமா, தனது தாய் இந்திராணி செல்போனுக்கும், சகோதரர் தியாகராஜன் செல்போனுக்கும் மாறி மாறி தொடர்பு கொண்டார் ஆனால் இருவரும் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உமா, நேற்றுமுன்தினம் இரவு மாதவரம் வந்து பார்த்தார்.

அப்போது வீட்டின் கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தனது தாய் மற்றும் சகோதரர் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு கதறி அழுதார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் மற்றும் போலீசார், தற்கொலை செய்துகொண்ட தாய்–மகன் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story