பெங்களூருவை 5 ஆக பிரிக்கும் திட்டத்திற்கு மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜனதா கடும் எதிர்ப்பு


பெங்களூருவை 5 ஆக பிரிக்கும் திட்டத்திற்கு மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜனதா கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 30 Jun 2018 5:15 AM IST (Updated: 30 Jun 2018 5:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவை 5 ஆக பிரிக்கும் திட்டத்திற்கு மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றும் அக்கட்சி அறிவித்தது.

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி மாதாந்திர கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாளாக கூட்டம் நடைபெற்றது. மேயர் சம்பத்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை மேயர், கமிஷனர், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும், எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி எழுந்து பேசுகையில், “பெங்களூரு மாநகராட்சியை 5 ஆக பிரிக்க அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவிக்கிறது. இது கெம்பேகவுடாவுக்கு செய்யும் அவமானம் ஆகும்” என்றார்.

மேலும் பா.ஜனதா கவுன்சிலர்கள் எழுந்து நின்று, எக்காரணம் கொண்டும் பெங்களூரு மாநகராட்சியை பிரிக்கக்கூடாது என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் குழு தலைவர் சிவராஜ், கவுன்சிலர்கள் குணசேகர், பத்மாவதி ஆகியோர் மேயர் இருக்கையை முற்றுகையிட்டு பா.ஜனதா உறுப்பினர்களுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

பா.ஜனதாவினர் வெறும் விளம்பரத்திற்காக இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர் என்றும் காங்கிரசார் குற்றம்சாட்டினர். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் குழு தலைவர் சிவராஜ், எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி ஆகியோர் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி பேசியதாவது:-

பெங்களூரு மாநகராட்சியை 5 ஆக பிரிக்க வேண்டும் என்று நிபுணர் குழு மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நாங்கள் மாநகராட்சியை பிரிக்க அனுமதிக்க மாட்டோம். இதை எதிர்த்து நாங்கள் தீவிரமாக போராட்டம் நடத்துவோம். 198 வார்டுகளை கொண்ட பெங்களூரு மாநகராட்சியின் நிர்வாகம் சரியாக நடத்தப்படவில்லையா?.

30 ஆயிரம் மக்கள்தொகைக்கு ஒரு வார்டு என்ற வீதத்தில் 400 வார்டுகள் பிரிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரு வார்டுக்கு 2 என்ஜினீயர்கள் மற்றும் அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள். இதனால் மாநகராட்சிக்கு நிதிச்சுமை ஏற்படும். ஏற்கனவே ஆட்சி நிர்வாகம் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 8 மண்டலங்களிலும் இணை கமிஷனர்கள் உள்ளனர்.

அந்த இணை கமிஷனர் பதவிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்தால் போதுமானது. மாநகராட்சியை பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாநகராட்சியை பிரிக்கும் மாநில அரசின் திட்டம் குறித்து எங்கள் கட்சியில் ஆலோசிக்கப்படும். அதன் சாதக-பாதகங்கள் குறித்து விவாதிக்கப்படும். இந்த விஷயத்தில் போராட்டம் நடத்தப்படும். இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம்.

இவ்வாறு பத்மநாபரெட்டி பேசினார். 

Next Story