மின்சாரத்தை தொட்டால் ‘ஷாக்’ அடிக்காத தொழில்நுட்பம் தமிழக ஆய்வாளர் கண்டுபிடிப்பு


மின்சாரத்தை தொட்டால் ‘ஷாக்’ அடிக்காத தொழில்நுட்பம் தமிழக ஆய்வாளர் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 30 Jun 2018 3:16 PM IST (Updated: 30 Jun 2018 3:16 PM IST)
t-max-icont-min-icon

‘‘ஷாக் அடிக்காத மின்சார தொழில்நுட்பத்தை முழுமைப்படுத்திய பிறகே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு திட்டமிட்டிருக்கிறேன் என்கிறார் உமா மகேஷ்.

சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் உமா மகேஷ். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் என்ஜினீயரான இவர் தற்போது துபாயில் பணியாற்றி வருகிறார். துபாயில் நிலவி வரும் தொழில்நுட்ப புரட்சி, உமா மகேஷையும் ஆட்கொண்டிருக்கிறது. அங்கு நடைபெறும் அறிவியல் கண்காட்சிகளில் தவறாமல் கலந்துகொள்வதுடன், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பல விஷயங்களையும் அலசி ஆராய்ந்துள்ளார். அதன் தாக்கமாக மின்சாரத்தை தொட்டாலும், ஷாக் அடிக்காத தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார். ஆம்..! இவர் ‘நானோ டிரான்ஸ்பார்மர்’ என்ற தொழில்நுட்பத்தின் மூலம் மின்சாரத்தை ஷாக் அடிக்காமல் தொட்டு பார்க்க முடியும் என்கிறார். அதுபற்றி உமா மகேஷ் விளக்கமாக பேசுகிறார்.

‘‘மின்சாரத்தை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். அவர் நூறு ஆண்டுகளுக்கு முன்பு எந்த வடிவில் மின்சாரத்தை கண்டுபிடித்தாரோ, அதே வடிவில் தான் நாம் பயன்படுத்தி வருகிறோம். மின்சார வடிவமைப்பில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மின்சாரத்தை மாற்றியமைக்கும் முயற்சியிலும் ஈடுபடவில்லை. அதனால்தான் நான் மின்சாரத்தை கையில் எடுத்தேன். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் வசித்து வந்த வீட்டின் அருகே ஒரு சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவமும் என்னை மின்சார வடிவமைப்பில் மாற்றத்தை கொண்டுவர ஊக்கப்படுத்தியது. இதன் காரணமாகவே இந்த ‘நானோ டிரான்ஸ்பார்மர்’ தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளேன். இதனை வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பொருத்தினால் ‘மின்சார ஷாக்’ என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த புதிய டிரான்ஸ்பார்மரை பொருத்தி விட்டு மின்சாரத்தை கையால் தொடலாம். எத்தகைய பாதிப்பும் ஏற்படாது. இந்த புதிய தொழில்நுட்பத்தை என் மகள் உள்ளிட்ட குடும்பத்தினரை வைத்து சோதனை செய்துள்ளேன். இந்த சோதனையின் போது அவர்கள் மின்சாரத்தை கையால் தொட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை’’ என்பவர் இந்த தொழில்நுட்பத்தை துபாயில் நடைபெற்ற கண்காட்சியில் காட்சிப்படுத்தினார். இவரது தொழில்நுட்பத்திற்கு துபாய் அரசின் உயர்மட்ட அதிகாரிகளின் பாராட்டுகள் குவிந்தன.

‘‘ஷாக் அடிக்காத மின்சார தொழில்நுட்பத்தை முழுமைப்படுத்திய பிறகே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு திட்டமிட்டிருக்கிறேன். அதற்கு துபாய் அரசாங்கம் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன். இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறும் பட்சத்தில் இந்த தொழில்நுட்பம் இங்கு செயல்படுத்தப்படும். இந்த பணிக்கு அமீரகத்தில் வசித்து வரும் தமிழர்கள் உள்ளிட்ட பலர் ஆதரவு அளித்து வருகின்றனர். இது எனக்கு பெரிதும் மனநிறைவை அளித்திருக்கிறது’’ என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் உமா மகேஷை அவரது மனைவி ராதிகாவும், 7 வயது மகள் ஆஷிகாவும் கொண்டாடுகிறார்கள். 

Next Story