கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு வாக்குமூலம் அளித்தனர்: தூத்துக்குடி கலவரம் தொடர்பாக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு


கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு வாக்குமூலம் அளித்தனர்: தூத்துக்குடி கலவரம் தொடர்பாக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு
x
தினத்தந்தி 1 July 2018 3:00 AM IST (Updated: 30 Jun 2018 7:20 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் வாக்குமூலம் அளித்துள்ளனர். தொடர்ந்து அதிகாரிகள் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணைய துணை தலைவர் முருகன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் வாக்குமூலம் அளித்துள்ளனர். தொடர்ந்து அதிகாரிகள் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணைய துணை தலைவர் முருகன் கூறியுள்ளார்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22–ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு, தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர். இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 4 பேரும் இறந்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணைய துணை தலைவர் முருகன், ஆலோசகர் ராமசாமி ஆகியோர் கடந்த 28–ந் தேதி தூத்துக்குடி வந்தனர். அவர்கள் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினர்.

நேற்று காலையில் நடந்த 3–ம் நாள் விசாரணையின் போது தற்போதைய மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, அரசு மருத்துவமனை டீன் லலிதா உள்ளிட்டோர் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தனர்.

துணை தலைவர் பேட்டி

அதன்பின்னர் நேற்று மதியம் தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணைய துணை தலைவர் முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;–

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22, 23–ந் தேதிகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். இதில் 4 பேர், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இது தொடர்பாக நாங்கள் கடந்த நாட்கள் விசாரணை நடத்தினோம்.

முதல்நாள் விசாரணையில், கலவரத்தில் உயிர் இழந்த 4 பேர் குடும்பத்தினரும் எங்களிடம் வாக்குமூலம் கொடுத்தனர். அன்று கள ஆய்வும் மேற்கொண்டோம். பொதுமக்களும் எங்களிடத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். தொடர்ந்து நேற்று (அதாவது நேற்று முன்தினம்) சம்பவம் நடந்த போது இங்கு இருந்த அதிகாரிகள், முன்னாள் மாவட்ட கலெக்டர், முன்னாள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, அப்போதைய போலீஸ் ஐ.ஜி., டி.ஐ.ஜி, இணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் வருவாய்த்துறையினரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

கலெக்டரிடம் விசாரணை

தொடர்ந்து இன்றும் (அதாவது நேற்று) அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெற்றோம். மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் மருத்துவமனை டீன் லலிதாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அதேபோல் தற்போது உள்ள மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆகியோரிடமும் துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின்னர் எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகள் பற்றி கேட்கப்பட்டது.

துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த காளியப்பன், கந்தையா ஆகியோரின் குடும்பத்தினருக்கு மருத்துவ வசதி தேவைப்படுகிறது. கந்தையாவின் மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளேன். காளியப்பனின் தந்தையும் மனநலம் பாதிக்கப்பட்டவர். தாயாருக்கும் மருத்துவ வசதி தேவைப்படுகிறது. அவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளேன்.

அதேநேரத்தில் கிராமங்களில் மக்களுக்கு உள்ள பயத்தை போக்கும் வகையில் அவர்கள் சொந்த தொழில் தொடங்க உதவி செய்ய வேண்டும் என்றும், அந்த பகுதிகளில் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளேன். மேலும் கலவரம் காரணமாக மாணவர்கள் பள்ளி செல்வது தடைப்பட கூடாது என்பதற்காக அவர்கள் பள்ளி செல்வதை கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளேன். இது தொடர்பான அறிக்கை ஒருவாரம் அல்லது 15 நாட்களில் சமர்பிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளேன்.

ஜனாதிபதியிடம் அறிக்கை

கலவரம் தொடர்பாக சில அதிகாரிகளிடம் வாக்குமூலம் வாங்க வேண்டியது உள்ளது. அவர்களுக்கு சம்மன் அனுப்பி டெல்லி அல்லது சென்னைக்கு வரவழைக்க உள்ளோம். அந்த வாக்குமூலங்களை பெற்ற பின்னர் ஒரு விரிவான விசாரணை அறிக்கை தயாரித்து ஜனாதிபதியிடமும், உள்துறை அமைச்சகத்திடமும் அளிக்க உள்ளோம்.

இந்த 3 நாட்களில் அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் என 20–க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். பொதுமக்களிடம் வாக்குமூலம் வாங்க வேண்டும் என்றால் மீண்டும் நாங்கள் தூத்துக்குடி வருவோம். தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சரியாக போய் சேரவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் வந்த சில புகார்களின் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

--–

தூத்துக்குடியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் அரசு ஆஸ்பத்திரி டீன் லலிதா ஆஜரான போது எடுத்த படம்.

--–

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆகியோர் வாக்குமூலம் அளிக்க வந்த போது எடுத்த படம்.


Next Story