மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் சிறை நிரப்பும் போராட்டம் சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் சுகுமார் அறிவிப்பு


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் சிறை நிரப்பும் போராட்டம் சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் சுகுமார் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 July 2018 2:30 AM IST (Updated: 30 Jun 2018 7:55 PM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் சுகுமார் கூறினார்.

நெல்லை,

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் சுகுமார் கூறினார்.

அலுவலகம் திறப்பு விழா

நெல்லை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அமைக்கப்பட்டுள்ள சித்தன் நூற்றாண்டு நினைவு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. மாநில செயலாளர் சுகுமார் கலந்து கொண்டு, கட்டிடத்தை திறந்து வைத்தார். தலைவர் பத்மநாபன் சங்க கொடி ஏற்றினார்.

இதைத்தொடர்ந்து சங்க குடும்ப விழா நடந்தது. மாநில குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார். துணை செயலாளர் சரசுவதி வரவேற்று பேசினார். மாவட்ட துணை தலைவர் ராஜாங்கம் தொடங்க உரையாற்றினார். மாநில செயலாளர் சுகுமார் கலந்து கொண்டு பேசினார்.

விழாவில் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் வின்சென்ட், குமரகுருபரன், பாலசுப்பிரமணியன், மோகன், காமராஜ், ஜோதி, மணி, வேல்முருகன், முத்துகிருஷ்ணன், முருகன், ஆறுமுகநயினார், காசிராஜன், பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் சுகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

சரக்கு சேவை வரி விதிப்பால் தமிழ்நாட்டில் ஏராளமான சிறு, குறு தொழில்கள் முடங்கி உள்ளன. சிறிய தொழில் செய்கிறவர்களால் தொழில் செய்ய முடியாத நிலை வந்து விட்டது. இதனால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இதை அரசு கண்டு கொள்வதில்லை. மத்திய–மாநில அரசுகள் தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. சிறுபோராட்டம் என்றால் கூட மாநில அரசு அனுமதி அளிக்க மறுத்து போராட்டத்தை நசுக்க பார்க்கிறது.

சிறை நிரப்பும் போராட்டம்

தமிழ்நாட்டில் 8 வழிச்சாலை தேவையில்லை அதற்கு எதிராக யார் போராட்டம் நடத்தினாலும் அரசு கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய–மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ஆகஸ்டு 9–ந் தேதி சி.ஐ.டி.யு. சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சிறைநிரப்பும் போராட்டம் நடத்த உள்ளோம். செப்டம்பர் 5–ந் தேதி டெல்லியில் மாபெரும் கோரிக்கை விளக்க பேரணி நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story