ஓட்டப்பிடாரம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் கிணற்றில் மூழ்கினார் தேடும் பணி தீவிரம்
ஓட்டப்பிடாரம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் கிணற்றில் மூழ்கினார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் கிணற்றில் மூழ்கினார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நண்பர்கள்தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொம்பாடி தளவாய்புரத்தை சேர்ந்தவர் இருதயராஜ். இவருடைய மகன் மைக்கேல் பிரதீப் (வயது 23). இவருடைய நண்பர்கள் தூத்துக்குடியை சேர்ந்த பொன்பால் டேவிட் இமானுவேல் (23), மணிமாறன் (22), செல்வநரேஷ் (23), முகமது அகில் (23), செல்வபிரசாத் (23). இவர்கள் 5 பேரும் விடுமுறை நாட்களில் மைக்கேல் பிரதீப்பை பார்ப்பதற்காக கொம்பாடி தளவாய்புரம் வருவது வழக்கம். அப்படி அவர்கள் வரும் போது ஊருக்கு தெற்கே கணேசன் என்பவருக்கு சொந்தமான சுமார் 40 அடி ஆழம் உள்ள கிணற்றில் குளிப்பார்களாம்.
இந்த நிலையில் நேற்று காலையில் 5 பேரும் மைக்கேல் பிரதீப்பை சந்திக்க கொம்பாடி தளவாய்புரம் வந்தனர். அவர்கள் அனைவரும் கிணற்றில் குளித்து கொண்டு இருந்தனர். பொன்பால் டேவிட் இமானுவேலுக்கு நீச்சல் சரியாக தெரியாது. இதனால் அவர் நீச்சல் பழகி கொண்டு இருந்தார்.
கிணற்றில் மூழ்கினார்இந்த நிலையில் பொன்பால் டேவிட் இமானுவேல் திடீரென தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. மற்ற நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லையாம். இதனால் உடனடியாக மணியாச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பொன்பால் டேவிட் இமானுவேலை தேடும் பணியில் ஈடுபட்டனர். 40 அடி வரை தண்ணீர் இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் சிலிண்டர் மாட்டிக்கொண்டு கிணற்றில் இறங்கி, தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து மணியாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் மூழ்கிய பொன்பால் டேவிட் இமானுவேல் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.