வடசேரி காசிவிஸ்வநாதர் கோவிலில் துணிகரம்: அம்மன் சிலையில் கிடந்த தங்க– வெள்ளி நகைகள் திருட்டு


வடசேரி காசிவிஸ்வநாதர் கோவிலில் துணிகரம்: அம்மன் சிலையில் கிடந்த தங்க– வெள்ளி நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 1 July 2018 4:45 AM IST (Updated: 30 Jun 2018 11:04 PM IST)
t-max-icont-min-icon

வடசேரி காசி விஸ்வநாதர் கோவிலில் அம்மன் சிலையில் கிடந்த தங்க– வெள்ளி நகைகளை, முகமூடி அணிந்து வந்து துணிகரமாக திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகிறார்கள்.

நாகர்கோவில்,


நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே டிஸ்லரி ரோட்டில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கு காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி அம்மன், பிள்ளையார், முருகன் உள்ளிட்ட சாமி சன்னதிகள் உள்ளன. தினமும் காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கமான பூஜைகளை முடிந்த பின்னர், பூசாரியும், கோவில் நிர்வாகிகளும் கோவிலை பூட்டிவிட்டு சென்றனர்.


இதைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணி அளவில் அந்த வழியாக போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கோவிலின் கதவு திறக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உடனே கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்தனர்.

பின்னர் போலீசாரும், நிர்வாகிகளும் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அம்மன் சன்னதி கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. அம்மன் சிலையின் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 1 பவுன் தங்க நகையை காணவில்லை. மேலும் மூக்குத்தி, கம்மல் உள்ளிட்ட வெள்ளி நகைகளும் மாயமாகி இருந்தது. இதைப் பார்த்து கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இரவில் யாரோ மர்ம நபர் கோவிலுக்குள் புகுந்து தங்க மற்றும் வெள்ளி நகையை திருடி சென்றது தெரியவந்தது.


இதனையடுத்து திருட்டு சம்பவம் நடைபெற்று சிறிது நேரம் தான் ஆகியிருக்க வேண்டும் என்று கருதிய போலீசார் துரிதமாக செயல்பட்டனர். வடசேரி பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக யாரேனும் சுற்றித்திரிகிறார்களா? என்று ஆய்வு செய்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் மர்ம நபர் பற்றி எந்த விவரமும் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் மர்ம நபரின் உருவமும், கோவிலில் நகை திருடும் காட்சியும் பதிவாகி இருந்தது. கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர் தந்திரமாகவே செயல்பட்டு இருக்கிறார்.

அதாவது கோவிலில் கண்காணிப்பு கேமரா இருப்பதை அந்த மர்ம நபர் ஏற்கனவே தெரிந்து வைத்துள்ளார். ஏன் எனில் கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் இருப்பதற்காக முகமூடி அணிந்தபடி திருட்டில் ஈடுபட்டு உள்ளார். அதிலும் கோவிலுக்குள் புகுந்ததும் முதலில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் அறையை தேடியுள்ளார். ஆனால் அதை மர்ம நபரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன்பிறகு முதலில் காசி விஸ்வநாதர் சன்னதி கதவின் பூட்டை ஒரு கட்டையால் அடித்து உடைக்க முயன்றுள்ளார். ஆனால் பூட்டு உடையவில்லை. பின்னர் தான் அம்மன் சன்னதி கதவின் பூட்டை உடைத்து தங்க மற்றும் வெள்ளி நகைகளை திருடி இருக்கிறான். இந்த காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி இருக்கிறது. இதை வைத்து மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.


காசி விஸ்வநாதர் கோவில் இருக்கும் இடத்தில் எப்போதும் ஆள்நடமாட்டம் இருக்கும். அப்படி இருந்தும் மர்ம நபர் துணிச்சலாக திருட்டில் ஈடுபட்டு இருக்கிறார். எனவே மர்ம நபர் பல நாட்களாக கோவிலை நோட்டமிட்டு இந்த திருட்டை அரங்கேற்றி இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story