ஊட்டியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் படகு சவாரி நிறுத்தம்
ஊட்டியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. மேலும் வனப்பகுதிகளில் உள்ள தடுப்பணைகளில் கணிசமாக தண்ணீர் சேகரமானது. பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக ஊட்டி நகரில் மழை பெய்யாமல் வெயில் அடித்து வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை முதலே ஊட்டியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. பின்னர் திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால் ஊட்டி கமர்சியல் சாலை, கூட்ஷெட் சாலை, எட்டின்ஸ் சாலை, சேரிங்கிராஸ் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் மழைக்கு ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்த படி நடந்து சென்றனர். 3 மணி நேரத்துக்கும் மேல் தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்ததால், சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்தது. ஊட்டி படகு இல்லத்தில் மழை காரணமாக படகு சவாரி நிறுத்தப்பட்டது. மிதி படகு, துடுப்பு படகுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி இயக்கப்பட வில்லை.
மோட்டார் படகுகள் மட்டுமே இயக்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் அதில் சவாரி செய்து மகிழ்ந்தனர். ஊட்டியில் நேற்று பகலில் தொடர்ந்து மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். மழையால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர். ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான கேத்தி, லவ்டேல், எல்லநள்ளி, தலைகுந்தா, எச்.பி.எப்., புதுமந்து உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஊட்டியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரம் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:–
குன்னூர்–5.6, கேத்தி–37, கோத்தகிரி–12, நடுவட்டம்–2, ஊட்டி–12.3, கோடநாடு–13, தேவாலா–8 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 89.9 பெய்து உள்ளது. இது சராசரியாக 5.29 மி.மீ. ஆகும்.