காரைக்குடி–பட்டுக்கோட்டை பயணிகள் ரெயில் நாளை முதல் இயக்கப்படுகிறது, அதிகாரிகள் தகவல்
காரைக்குடி–பட்டுக்கோட்டை இடையேயான அகல ரெயில் பாதையில் பயணிகள் ரெயில் நாளை முதல் இயக்கப்படும்என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
காரைக்குடி,
காரைக்குடி–பட்டுக்கோட்டை அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்று கடந்த மார்ச் மாதம் 30–ந் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் பயணிகள் ரெயில் வைத்து இயக்கப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு வேகங்களில் ரெயில் இயக்கப்பட்டு ரெயில் தண்டவாளம், பாலங்கள் குறித்து சோதனை செய்யப்பட்டது. மேலும் தண்டவாளங்கள், பாலங்கள் ஆகியவற்றில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று 2–வது முறையாக சோதனை ஓட்டமாக காரைக்குடி–பட்டுக்கோட்டை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது.
இதையொட்டி நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த ரெயில் பயணிகளுக்காக இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6மணிக்கு புறப்பட்டு கண்டனூர், புதுவயல், வாழ்கிறமாணிக்கம், அறந்தாங்கி, ஆயங்குடி, பேராவூரணி, ஒட்டங்காடு வழியாக மதியம் 12.30மணிக்கு பட்டுக்கோட்டையை அடையும். பின்னர் அங்கிருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு இரவு 7.30 மணிக்கு வந்து சேரும். இந்த தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த பயணிகள் ரெயிலை சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று காரைக்குடி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.