மழையின் காரணமாக தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் வாழை மரங்களும் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை


மழையின் காரணமாக தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் வாழை மரங்களும் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 1 July 2018 4:30 AM IST (Updated: 1 July 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து உள்ளன. மேலும் வாழை மரங்களும் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

திருவரங்குளம்,

புதுக்கோட்டை, திருவரங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் வல்லத்திராக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பாலக்குடிபட்டி, கூடலூர், கலங்குடி, கிங்கினிபட்டி, கன்னியாபட்டி, பெரியநாயகிபுரம், பாலவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதேபோல கத்தக்குறிச்சி பகுதியில் சாகுபடி செய்திருந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக மழையில்லை. இதனால் பலர் விவசாயத்தை விட்டு சென்று விட்டனர். இருந்தபோதிலும் விவசாயத்தை விட்டுவிடக்கூடாது என நினைத்து விவசாயம் மட்டுமே தெரிந்த விவசாயிகள் சிலர் இந்தாண்டு விவசாயம் செய்து உள்ளனர். விவசாயம் செய்ய வங்கியில் கடன் கேட்டும் கிடைக்காததால், தனியாரிடம் வட்டிக்கு கடன் பெற்றும், தங்களது நகைகளை அடகு வைத்தும் இந்த பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் 3 மாத குறுவை சாகுபடியான நெல் சாகுபடி செய்து உள்ளனர்.

போதிய நேரத்தில் மழை பெய்யாததால் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்தோம். மிகுந்த சிரமத்திற்கு இடையில் நெற்பயிற்களை வளர்த்து இன்னும் சில தினங்ளில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடபட்டு இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழகிவிட்டது. இந்த பயிர்கள் அழுகி முளைத்துவிடும் என்பதால் நாங்கள் செய்வதறியாமல் தவித்து வருகிறோம்.

ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்து பயிரிட்டால் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் கிடைக்கும். ஆனால் தற்போது அனைத்து பயிர்களும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி விட்டதால் வட்டிக்கு வாங்கிய கடனை எவ்வாறு திரும்ப செலுத்துவது என தெரியாமல் தவித்து வருகிறோம். இது குறித்து உடனடியாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தண்ணீரில் மூழ்கி உள்ள நெற்பயிர்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுத்து வழங்கினால் மட்டுமே எங்களால், உயிர்வாழ முடியும். அரசு நிவாரணம் கொடுக்காவிட்டால் நாங்களும் விவசாயத்தில் இனி வரும் காலங்களில் ஈடுபடாமல் மாற்று தொழிலுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story