இந்த மாதம் முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் அமைச்சர் தகவல்


இந்த மாதம் முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 1 July 2018 4:30 AM IST (Updated: 1 July 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வந்து இந்த மாதம் முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் எடுக்க உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

எலச்சிப்பாளையம்,

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மார்ச் 2018-ல் நடந்த அரசு பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கும் விழா நடந்தது. திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவன வளாகத்தில் நடந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி முன்னிலை வகித்தார்.

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, தமிழக சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர், விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். விழாவில் 161 அரசு பள்ளிகளை சேர்ந்த 1,322 ஆசிரிய-ஆசிரியைகளுக்கு பரிசு கோப்பை, பாராட்டு சான்றுகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ரூ.27 ஆயிரத்து 205 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த மாதம் லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வருகிறார்கள். மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் 6 வாரம் தங்கியிருந்து மாணவர்களுக்கு சிறந்த ஆங்கிலத்தை கற்றுத் தர இருக்கிறார்கள். இந்த ஆங்கில பயிற்சி வகுப்பு புதுமையானதாக இருக்கும். 1, 6, 9, 11,-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையான பாடத்திட்டத்தை வழங்கி உள்ளோம்.

அங்கன்வாடியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் சரளமாக பேசக்கூடிய வகையில் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கிற மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கிளாஸ்’ 3 ஆயிரம் பள்ளிகளில் கொண்டு வர டெண்டர் விடப்பட்டுள்ளது.

9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு படிக்கிற மாணவர்களுக்கு ஒரு வகுப்பறைக்கு 10 கணினி, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 20 கணினி என வழங்கி இணைய தள பயிற்சி அளிக்கப்படும். ஒரு சிறந்த ஆசிரியர் 100 பள்ளிக்கு காணொலி காட்சி மூலமாக பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆடிட்டர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறார்கள். எந்த வேளையில் எப்படி பயிற்சி என்பது குறித்து அரசு பரிசீலித்து கொண்டு இருக்கிறது. 20 ஆயிரம் மாணவர்கள் இதன் மூலம் தணிக்கை பயிற்சி பெற்று வேலை வாய்ப்பு பெறுவார்கள். தமிழகத்தில் 15 இடங்களில் சி.ஏ. பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ஈரோடு மாவட்டம் கோபியில் தொடங்கப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story