எக்காரணம் கொண்டும் பெங்களூரு மாநகராட்சியை பிரிக்கக்கூடாது - வாட்டாள் நாகராஜ்


எக்காரணம் கொண்டும் பெங்களூரு மாநகராட்சியை பிரிக்கக்கூடாது - வாட்டாள் நாகராஜ்
x
தினத்தந்தி 1 July 2018 3:19 AM IST (Updated: 1 July 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

எக்காரணம் கொண்டும் பெங்களூரு மாநகராட்சியை பிரிக்கக்கூடாது என்று வாட்டாள் நாகராஜ் கூறினார்.

பெங்களூரு,

கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் பெங்களுருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு மாநகரை கெம்பேகவுடா நிர்மாணித்தார். எக்காரணம் கொண்டும் மாநகராட்சியை பிரிக்கக்கூடாது. மேயர், மக்கள் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்க வழிவகை செய்ய வேண்டும். ஒருவேளை மாநகராட்சியை பிரித்தால் நாங்கள் தீவிரமாக போராட்டம் நடத்துவோம். 400 வார்டுகளாக, பிரித்து 5 மாநகராட்சிகளை உருவாக்குவது அறிவியலுக்கு மாறானது.

பெங்களூரு உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. உலகில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் இங்கு வருகிறார்கள். 5 மாநகராட்சிகள் இருந்தால் 5 மேயர்கள் இருப்பார்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்களை யார் வரவேற்பார்கள். மாநகராட்சியை பிரிப்பது கெம்பேகவுடாவின் நோக்கத்தை சிதைப்பது ஆகும்.

இதை கண்டித்து நாளை(அதாவது இன்று) மாநகராட்சி முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். காவிரி மேலாண்மை ஆணையத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். அரசியல் நோக்கத்திற்காக அந்த ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய அரசின் நெருக்கடிக்கு மாநில அரசு பணியக்கூடாது. நமது அணைகளை ஆணையத்திடம் கொடுத்துவிட்டு, கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது. இந்த நிலை ஏற்பட்டால் நமது எதிர்காலம் அபாயகரமானதாக மாறிவிடும்.
இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.

Next Story