பறக்கும் ‘பைக்’ பாவை
பிடித்த சாகசத்தை செய்து புகழுடன் வாழவேண்டும் என்ற ஆசை பஜீலாவுக்கு! தனது திறமையை ‘பைக் ரேசில்’ காட்ட விரும்பிய இவர், தேசிய பைக் ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார்.
பிடித்த சாகசத்தை செய்து புகழுடன் வாழவேண்டும் என்ற ஆசை பஜீலாவுக்கு! தனது திறமையை ‘பைக் ரேசில்’ காட்ட விரும்பிய இவர், தேசிய பைக் ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். முதல் போட்டியிலே, இரண்டாவது இடத்தை பிடித்து வெற்றிவாகை சூடிவிட்டார். பஜீலா, பாலக்காடு பகுதியை சேர்ந்தவர்.
“நான் யோகா மற்றும் உடற்பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். எர்ணாகுளத்தில் அதற்கான மையம் ஒன்றில் பயிற்சியாளராக வேலைபார்த்து வந்தேன். பைக் ஓட்டவும் முறைப்படி கற்றுக்கொண்டேன். ஒருமுைற என் தோழியை அவளது வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தேன். சில இளைஞர்கள் பைக்கில் ‘ராங் சைடில்’ வந்து என் கவனத்தை கவர்ந்தார்கள். பின்பு அவர்கள் முன்பக்க சக்கரத்தை தூக்கி, அங்கும் இங்குமாக பைக்கை அசைத்து சாகசம் செய்யத் தொடங்கினார்கள். அந்த காட்சி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. நாமும் அதுபோல் செய்யலாமே என்று நினைத்து அதற்கான பயிற்சியை பெற விரும்பினேன். ‘பைக் ஸ்டன்ட்’ கற்றுத்தரும் குழு ஒன்றை கண்டுபிடித்து, அவர்களிடம் அத்தைகய சாகசங்களை கற்றுத்தரும்படி கூறினேன். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் அவர்கள் பின்னாலே அலைந்தேன். ஆனாலும் அவர்கள் உருப்படியாக எதையும் கற்றுத்தரவில்லை. பின்பு அதற்குரிய பைக் வாங்கினால்தான் அத்தகைய சாகசங்களை செய்ய முடியும் என்பதை அறிந்து, அந்த பைக்கை வாங்கி நானே சுயமாக சாகசங்களை ஒவ்வொன்றாக செய்து பார்த்தேன்.
பைக்கின் ‘ஹேன்டிலை’ மாற்றினால் சாகசத்திற்கு எளிதாக இருக்கும் என்பதை உணர்ந்து அதற்காக பிரத்யேக ஒர்க் ஷாப் நடத்தும் ஜோஸ் ஜெபஸ்டினையும், விஷ்ணுவையும் சந்தித்தேன். அதுதான் என் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. அவர்கள் என்னிடம், ரேசில் கலந்துகொள்ள ஆர்வம் இருக்கிறதா? என்று கேட்டார்கள். நானும் ஆர்வம் இருப்பதாக கூறி, 2016-ம் ஆண்டு எங்கள் பகுதிக்கு அருகில் நடந்த ரேசில் பங்கு பெற்றேன். அதில் நிறைய அனுபவம் கிடைத்தது.
சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டபோது பயம் இருக்கத்தான் செய்தது. இதயத்துடிப்பும் அதி கரித்தது. பைக்கில் பாய்ந்து சென்றேன். என்னை துரத்தி வந்த யார் யாரோ உருண்டு புரண்டார்கள். நான் எதையும் கண்டுகொள்ளாமல் மின்னலாக பாய்ந்துசென்றேன். எல்லைக்கோட்டை சென்றடைந்த பின்புதான் கவனித்தேன். எல்லோரது கரகோஷமும் எனக்கு கிடைத்துக்கொண்டிருந்தது. நான் வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள்..” என்று முதல் வெற்றியை ருசித்ததை நினைவுபடுத்துகிறார், பஜீலா.
பொதுவாக பைக் ரேசில் பங்குபெறுகிறவர்கள் உயரமானவர்களாக இருப்பார்கள். பஜீலா சற்று உயரம் குறைவானவர்.
“பைக் ரேசில் பல்வேறு சாதனைகள் படைத்த ரிக்கி கார்மைக்கேல் உயரம் குறைவானவர்தான். அவரது சாதனைகளை படித்துப்பார்த்ததும் உயரம் எனக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. பைக் ரேஸில் சாதிக்க உடல்பலத்தைவிட மனபலமும் மிக அவசியம். யோகா அதற்கான பலத்தை தருகிறது. இப்போது என் முழு கவனமும் இந்த வருடம் நடைபெற இருக்கிற சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதிலே இருந்துகொண்டிருக்கிறது. அதற்கான கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். போட்டியில் கலந்துகொள்ள ‘ஸ்பான்சர்கள்’ தேவைப்படுகிறார்கள். கிடைக்காவிட்டால் இரண்டு வருடங்கள் யோகா பயிற்சியாளராக வேலைபார்த்து அதில் கிடைக்கும் பணத்தை சேமித்து, பின்பு போட்டியில் கலந்துகொள்வேன்” என்று பஜீலா சொல் கிறார். இவரது வயது 27. இவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது.
Related Tags :
Next Story