ஜப்பானில் மாணவர்களை கவர்ந்த மனித ரோபோக்கள்
அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று கலை மற்றும் பண்பாட்டில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகளை தேர்வுசெய்து அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து, அங்குள்ள அறிவியல் சார்ந்த கல்விமுறைகள் குறித்து அறியவைக்கும் புதிய திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று கலை மற்றும் பண்பாட்டில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகளை தேர்வுசெய்து அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து, அங்குள்ள அறிவியல் சார்ந்த கல்விமுறைகள் குறித்து அறியவைக்கும் புதிய திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘சகுரா எக்சேன்ஞ் புரோகிராம் இன் சயின்ஸ்’ என்ற இந்த திட்டத்தின்படி ஜப்பானுக்கு செல்ல இந்தியாவில் இருந்து 32 மாணவ- மாணவியர் தேர்வுசெய்யப்பட்டனர்.
அந்த குழுவில் இடம்பெற்ற மாணவர்களில் ஒருவர் சதீஷ்கண்ணன். 16 வயதான இவர், திருப்பூர் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அவரது தந்தை சென்ட்ராயர்(51) பனியன் பிரிண்டிங் பட்டறை தொழிலாளி. தாயார் செல்வி(42). திருப்பூரை அடுத்த முதலிபாளையம் சிட்கோ பகுதியில் வசித்து வருகிறார்கள். ஏழைக்குடும்பத்தில் பிறந்த சதீஷ்கண்ணன் சிட்கோவில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வில் 483 மதிப்பெண் பெற்றவர்.
சதீஷ்கண்ணன் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவ- மாணவி களோடு இணைந்து ஜப்பான் பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து திரும்பி வந்திருக்கும் இவர், தனது பயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்!
“நான் ஜப்பான் செல்ல தேர்வு செய்யப்பட்டது எனக்கு மட்டுமல்ல, எனது பெற்றோருக்கும் அதிக மகிழ்ச்சியை கொடுத்தது. இதுதான் எனது முதல் விமான பயணம். அதனால் திகில் கலந்த மகிழ்ச்சியடைந்தேன். என்னுடன் கோவை, கரூர், ஈரோடு, சென்னை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தலா ஒரு மாணவர் வீதம் ஜப்பானுக்கு வந்தார்கள். மற்ற மாநிலத்து மாணவர்களும், ஆசிரியர்களும் உடன் வந்திருந்தனர். எங்களைப்போல் மியான்மர், கம்போடி யோ நாடுகளில் இருந்தும் மாணவ-மாணவிகள் ஜப்பானுக்கு வந்திருந்தனர். நாங்கள் 96 பேர் பிரமாண்டமான ஒரே ஓட்டலில் தங்கி யிருந்தோம்.
முதலில் டோயோட்டோ கார் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு எங்களை அழைத்துச்சென்றார்கள். ரோபோக்களே அங்கு அதிகம் வேலை செய்தன. அங்குள்ள தொழிலாளர்கள் ரோபோக்களோடு இணைந்து உற்சாகமாக பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். பின்பு ரோபாட் கார்ப்பரேசன் என்ற நிறுவனத்தை பார்வையிட சென்றோம். அங்கு மனித வடிவிலான ரோபோக்களை நிறைய தயாரிக் கிறார்கள். தொழிற்சாலைகள், ஓட்டல்கள், பள்ளிகளில் பணியாற்றும் வகையில் ரோபோக்கள் அங்கு தயாரிக்கப்படுகின்றன. அவைகளின் தோற்றங்களும், செயல்களும் எங்களுக்கு வியப்பை ஏற் படுத்தின.
மறுநாள் ஜப்பான் அரசுக்கு சொந்தமான ‘ஈகோ டவுன்’ என்ற பகுதிக்கு அழைத்துச்சென்றார்கள். உபயோகமற்ற வீட்டு உபயோக பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், கார்கள் ஆகியவற்றை அங்கு கொண்டு வந்து அழித்து மறு சுழற்சி செய்து பயன்படுத்துகிறார்கள். ஜப்பானியர்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை அங்கு காண முடிந்தது.
ஜப்பான் நாட்டின் மிக பழமையான கோக்குரா கோட்டைக்கும் சென்றோம். அரசர்களின் மெழுகு சிலைகள், அவர்கள் பயன்படுத்திய ஆடைகள், அணிகலன்கள் போன்றவை அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அதை தொடர்ந்து புகழ்பெற்ற கியூசூ பல்கலைக்கழகத்துக்கு சென்றோம். உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி படிப்புகள் அங்கு பிரசித்தம். அங்கிருந்த பேராசிரியர்களுடன் உரையாடிவிட்டு வந்தோம். பிரசித்தி பெற்ற டோக்கியோ டவரையும் கண்டு ரசித்தோம்.
அங்குள்ள மக்கள் தங்கள் தாய்மொழியான ஜப்பானிய மொழியில் தான் பேசுகிறார்கள். ஆங்கிலத்தில் பேசுகிறவர்கள் மிகமிகக்குறைவு. பல்கலைக்கழகங்களில் உள்ள பாடப்பிரிவுகள்கூட அவர்களது தாய்மொழியிலேயே அமைந்துள்ளது. தாய் மொழிக்கு அவர்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அங்குள்ள ஒரு பள்ளிக்கு சென்று மாணவ-மாணவிகள் பாடம் கற்கும் முறையை கவனித்தோம். மாணவர்கள் அனைவரும் பாடப்புத்தகங்களுக்கு பதிலாக ‘டேப்’ வகையிலான சிறிய கணினியைவைத்து பாடம் படித்துக்கொண்டிருந்தார்கள்.
நிறைவு நாள் விழாவில் நான் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து பங்கேற்றேன். அங்கிருந்த மாணவர்கள் என்னை ஆச்சரியத்தோடு பார்த்தனர். வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றது எனக்கு பெருமையாக இருந்தது. மாணவ-மாணவிகள் நடனமாடி மகிழ்ந்தனர். பயணத்தின் நினைவாக எங்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள்.
எங்களுக்கு அங்கு இந்திய உணவு வகைகள் கிடைக்கவில்லை. காய்கறியை வேக வைத்து கொடுத்தார்கள். நூடுல்ஸ் வகை உணவுகளை ஜப்பானியர்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஸ்டாப் ஸ்டிக்ஸ் என்ற குச்சிகளை பயன்படுத்தி சாப்பிடுகிறார்கள். நாங்கள் ஸ்பூன் மூலமாக சாப்பிட்டதை அங்குள்ள மக்கள் வேடிக்கை பார்த்தனர். அங்குள்ள ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லை. தட்டு, குவளை போன்றவை களிமண், மரத்தால் செய்யப்பட்டவையாக இருந்தது. ரோட்டில் இருசக்கர வாகனத்தை மிக அரிதாகவே காணமுடிந்தது. பார்க்கும் இடமெல்லாம் கார்கள் மின்னல்வேகத்தில் சென்றுகொண்டிருந்தன. சாலையோரம் நிறைய மரங்கள் உள்ளன. புவி மாசுபடுவதை தடுக்கும் வகையில் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். என்னோடு பயணம் செய்த அனைத்து மாணவர்களிடமும் வாட்ஸ் அப் மூலம் தொடர்பில் இருக்கிறேன். எங்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக்கொண்டது. ஜப்பான் பயணத்தின் மூலம் வாழ்க்கைக்கு தேவையான ஏராளமான விஷயங்களை நாங்கள் கற்றுக்கொண்டுள்ளோம்” என்றார்.
Related Tags :
Next Story