புன்னகையோடு ஒரு பூங்கொத்து


புன்னகையோடு ஒரு பூங்கொத்து
x
தினத்தந்தி 1 July 2018 3:05 PM IST (Updated: 1 July 2018 3:05 PM IST)
t-max-icont-min-icon

‘‘பெண்களுக்கும், பூக்களுக்கும் இடையேயான நெருக்கம் பிரிக்கமுடியாதது. மலர் சூடுவதையும், மலரால் வீட்டை அழகுபடுத்துவதையும் பெரிதும் விரும்புவார்கள்.

‘‘பெண்களுக்கும், பூக்களுக்கும் இடையேயான நெருக்கம் பிரிக்கமுடியாதது. மலர் சூடுவதையும், மலரால் வீட்டை அழகுபடுத்துவதையும் பெரிதும் விரும்புவார்கள். இப்போதெல்லாம் பிறந்தநாள், திருமண நாள், குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா, வளைகாப்பு போன்ற விசேஷங்களில் பங்கேற்க வருபவர்கள் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் வீட்டில் மலர் அலங்காரம் செய்கிறார்கள். எல்லோரும் மலர் அலங்கார வேலைப்பாடுகளை கற்றுக்கொண்டால் இதற்கான செலவை குறைத்துவிடலாம். சிறப்பாக மலர் அலங்காரம் செய்வதோடு பூங்கொத்துகளும் உருவாக்கலாம்’’ என்கிறார், அமிர்தா.

50 வயதாகும் அமிர்தா, எம்.எஸ்சி, பி.எட், எம்.பில் படித்தவர். ஆசிரியையாக பணி புரிந்தவர். வீட்டை அழகுபடுத்தும் உள் அலங்கார வேலைப்பாடுகள் மீது கொண்ட ஆர்வமும், மலர் அலங்காரத்தின் மீதான பிரியமும் அமிர்தாவை தொழில் முனைவோராக உருவாக்கி இருக்கிறது. பூங்கொத்துக்களை விதவிதமாக தயார் செய்து அதற்கு அழகுருவம் கொடுக்கிறார். அதனை கற்றுக்கொடுத்து ஏராளமான பெண்கள் சுயதொழில் தொடங்கவும் அடித்தளம் அமைத்து கொடுத்திருக்கிறார்.

ஆசிரியராக இருந்தவர் அலங்காரத்தில் காலடி எடுத்து வைத்ததன் பின்னணியை விவரிக்கிறார்.

‘‘நான் இளங்கலை, முதுகலை படிப்பில் ‘ஹோம் சயின்ஸ்’ பாடத்தை தேர்வு செய்தேன். அதன் ஒரு பகுதியாக உள் அலங்கார வேலைப்பாடுகள் பற்றி சொல்லிக்கொடுத்தார்கள். மலர் அலங்காரம் செய்வது எப்படி - விசேஷ நிகழ்ச்சிகளில் மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் எளிமையான முறையில் அலங்கார வேலைப்பாடுகளை எப்படியெல்லாம் செய்யலாம் என்பது பற்றி கற்றுத்தந்தார்கள். பொதுவாகவே மலர்கள் மீது பெண்களுக்கு ஈர்ப்பு அதிகம் என்பதால் நானும் விரும்பி கற்றேன்.

படித்து முடித்து ஆசிரியராக பணி புரிய தொடங்கினாலும் வீட்டை அழகுபடுத்துவதற்கு மலர் அலங்காரத்தை மறக்காமல் கையில் எடுத்தேன். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மலர் அலங்காரத்தில் முழு கவனமும் செலுத்தினேன். அது நல்லதொரு பொழுதுபோக்காக அமைந்தது. என் கணவர் அய்யாவுவும் என் ஆர்வத்திற்கு ஊக்கம் கொடுத்தார். அனைத்து விஷேச நாட்களிலும் வீட்டை அலங்கரிக்க ஆர்வம் காட்டினேன். அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கும் அலங்காரம் செய்து கொடுக்கும்படி கேட்டார்கள்.

நான் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தேன். படிப்பு விஷயத்தில் அவர்களை போலவே என்னையும் மன அழுத்தம் ஆக்கிரமித்தது. அதில் இருந்து மீள்வதற்கு மலர் அலங்காரம்தான் மாற்றாக இருந்தது. ஒருகட்டத்தில் ஆசிரியை பணியை விட்டு விலகி முழுமையாக மலர் அலங்காரத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டேன்’’ என்கிறார்.

அமிர்தா 20 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறார். 19 ஆண்டுகளாக மலர் அலங்காரத்துடன் தொடர்பில் இருக்கிறார். பெண்கள் எந்த வேலை செய்தாலும் மலர் அலங்காரத்தையும் கற்றுக்கொள்ளலாம். அது பெண்களுக்கு பிடித்தமானது என்பதால் அதனையே முதலீடாக கொண்டு வீட்டில் இருந்தே குடும்ப வருமானத்தை பெருக்கலாம் என்கிறார்.

‘‘பூங்கொத்து தயார் செய்வது கடினமான வேலை அல்ல. பூ கட்டுவதை விட எளிமையானது. அதனால் பூக்கட்டும் பெண்கள் கண்டிப்பாக மலர் அலங்கார வேலைப்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். குறைந்த செலவிலேயே இரண்டு மூன்று பூக்களை கொண்டு கண்களை கவரும் அழகிய பூங்கொத்துகளை விதவிதமாக தயார் செய்து இருமடங்கு லாபம் சம்பாதித்துவிடலாம். எந்தந்த சீசனில் என்னென்ன பூக்கள் பூக்கும் என்பதை தெரிந்து அவைகளை பயன்படுத்தினால் செலவு குறையும்.

பண்டிகை போன்ற விசேஷ நாட்களில் பூக்களின் விலை அதிகமாக இருக்கும். அதனால் இரண்டு நாட்களுக்கு முன்பாக விலை குறைவாக இருக்கும்போதே பூக்களை வாங்கிவிட வேண்டும். எந்தெந்த பூக்கள் எத்தனை நாட்கள் வாடாமல் இருக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். அத்தகைய பூக்களை தேர்வு செய்தால் இழப்பு ஏற்படாது. பொதுவாக பூக்களை தண்ணீரில் போட்டு வைத்தாலே இரண்டு நாட்களுக்கு வாடாமல் இருக்கும். ஜின்னியா, கிரிசாந்தமம், ஜெர்பரா, கார்னேஷன், ஜிப்ஸி, கிளாடியோலஸ் போன்ற மலர்கள்தான் அலங்காரத்தில் அதிகம் இடம்பிடிக்கின்றன. இத்தகைய பூக்கள் நமது நாட்டின் கால நிலைக்கு ஈடுகொடுக்கக்கூடியவை. 5 நாட்கள் வரையிலும் வாடாமல் இருக்கும்'' என்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் பூங்கொத்துக்களின் தேவை மிக அதிகம் என்பது அமிர்தாவின் கருத்தாக இருக்கிறது. அனைத்து நாட்களிலும் அது தேவைப்படுகிறது என்கிறார்.

‘‘விருந்தினர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. முன்பு போல் இப்போதெல்லாம் பூங்கொத்துக்கள் சில நிமிடங்களில் கவனிப்பாரற்று மூலையில் வைக்கப்படுவதில்லை. கூடைப்பூங்கொத்துக்கள் மூன்று நான்கு நாட்கள் பொலிவு மாறாமல் இருக்கின்றன. நீரை உறிஞ்சி தக்கவைத்துக்கொள்ளும் ஸ்பாஞ்சுகளில் மலர்கள் சொருகப்பட்டு அலங்கரிக்கப்படுவதால் அவை பிரகாசமாக காட்சியளிக்கின்றன. வீட்டிற்குள்ளும் தோரணங்களாக பூங்கொத்துக்களை விதவிதமாக அலங்கரித்து வைக்கிறார்கள். பூங்கொத்துக்களின் வடிவங்களும் மாறிப்போய்விட்டன. முக்கோண வடிவம், இதய வடிவம் உள்பட மாறுபட்ட தோற்றத்தில் கண்களை ஈர்க்கும் நிறங்களின் கலவையில் மிளிருகின்றன. மருத்துவமனைகள், அலுவலகங்கள், கருத்தரங்கு நடைபெறும் இடங்கள், ஓட்டல்களின் வரவேற்பு அறைகளில் மலர் அலங்காரங்கள் பிரதானமாக இடம்பிடிக்கின்றன. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்களின் மனதை மலர் அலங்காரம் இதமாக்குகிறது. முன்பெல்லாம் விழா நடைபெறும் இடங்களில் அலங்காரம் செய்வதற்கு மணிக்கணக்கில் நேரங்களை செலவிட வேண்டியிருந்தது. இப்போதெல்லாம் வித்தியாசமான வேலைப்பாடுகளில் ஆங்காங்கே எளிதாகவே அலங்காரத்தை முடித்துவிடுகிறார்கள்.

மலர்களின் தேர்வு அறையின் நிறத்திற்கு ஏற்ப அமைந்தால் மலர் வேலைப்பாடுகள் பார்க்க அழகாக தெரியும். பகல் நேரங்களில் அடர்த்தியான நிறங்களிலும், இரவு நேரத்தில் மென்மையான நிறங்களிலும் அலங்காரம் செய்தால் பளிச்சென்று காட்சிதரும். சில இடங்களில் செயற்கை அலங்கார வேலைப்பாடுகள் இடம்பிடித்திருக்கும். அவை இயற்கையான மலர் அலங்காரங்களுக்கு ஈடாகாது. அந்த இடத்தில் மனதை வருடும் சூழலை இயற்கை மலர்களால் மட்டுமே கொடுக்க முடியும். அவை வீசும் வாசமும், அவற்றின் தோற்றமும் ரம்மியமான சூழலை ஏற்படுத்தி கொடுக்கும்.

மணமக்கள் பயணிக்கும் காரை அலங்கரிப்பதும் இப்போது சுலபமாகிவிட்டது. வீட்டில் இருந்தே ரெடிமேடாக மலர்களை அலங்கரித்து காரில் ஒட்டிவிடலாம். இணையதளங்களிலும் விதவிதமான மலர் அலங்காரங்கள் கொட்டி கிடக்கின்றன. முன்பெல்லாம் மல்லிகை, கனகாம்பரம், சாமந்தி போன்ற மலர்களைதான் அனைத்து விசேஷங்களுக்கும் பயன்படுத்தினார்கள். வெளிநாட்டு மலர்களை விரும்பினால் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது. இன்று வெளிநாட்டு மலர் களெல்லாம் இங்கேயே விளைவிக்கப்படுகின்றன. மார்க்கெட்டுகளிலும் பரவலாக கிடைக்கிறது. அதனால் விரும்பும் மலர்களை கொண்டு விதவிதமான மலர் வேலைப்பாடுகளை செய்துவிடலாம்.

ஜெர்பரா பூக்களின் விலை குறைவு. அவற்றுடன் ஒருசில மலர்களை கொண்டு குறைந்த செலவிலேயே அலங்கார வேலைப்பாடுகளை முழுமைப்படுத்திவிடலாம். எந்த பூக்களை எதனோடு சேர்த்து அலங்காரம் செய்தால் அழகாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள முறையாக கற்றுக்கொள்ள வேண்டும். அதனுடன் கற்பனை திறனையும், அழகியல் அம்சங்களையும் கலந்து முழுமைபடுத்த வேண்டும். மலர் அலங்காரம் எளிமையான கலை. 100 ரூபாய்க்கு பூக்கள் வாங்கினால் 500 ரூபாய் சம்பாதித்துவிடலாம். பூ கட்டுபவர்கள், வீட்டில் இருக்கும் குடும்ப தலைவிகள் மட்டுமல்ல கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் பகுதி நேர பணியாக மலர் அலங்கார வேலைப்பாடுகளில் ஈடுபடலாம். அது மன அமைதியையும் கொடுக்கும்’’ என்கிறார்.

அமிர்தா மலர் அலங்காரம் மட்டுமின்றி எம்ப்ராய்டரிங், பெயிண்டிங், கைவினைப்பொருட்கள் செய்தும் அசத்துகிறார். சென்னை வண்ணாரப்பேட்டையில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். அய்யாவு-அமிர்தா தம்பதிக்கு ஸ்கந்தபிரியா என்ற மகளும், கவுதம் விஷால் என்ற மகனும் இருக்கிறார்கள்.

கூடை பூங்கொத்து: செய்வது எப்படி?

‘பிளவர் போம்’ எனப்படும் ஸ்பாஞ்சை நீரில் நன்றாக நனைத்துக்கொள்ள வேண்டும். இது ஈரப்பதத்தை தக்கவைத்து மலர்களை வாடாமல் பாதுகாக்கும். இந்த ஸ்பாஞ்சை சிறிய மூங்கில் கூடையில் வைத்துக்கொள்ள வேண்டும். கார்னேஷன் மலர்களின் காம்புகளை கத்தரித்து ஸ்பாஞ்சில் ஆங்காங்கே சொருகி வைக்க வேண்டும். மலர்களின் காம்புகள் நீளமும், குட்டையுமாக இருந்தால் மலர்கள் பார்க்க அழகாக இருக்கும். பூக்களை சுற்றிலும் வாடாத தன்மை கொண்ட பிரத்யேக இலைகளை சொருகி வைக்க வேண்டும். அதைத்தொடர்ந்து ஜிப்ஸி பூக்களை பரவலாக சொருக வேண்டும். இந்த பூக்கள் பூங்கொத்தில் இருக்கும் வெற்றிடங்களை பூர்த்தி செய்து அழகிய தோற்றத்தை ஏற்படுத்திக்கொடுத்துவிடும். கார்னேஷன் மலர்கள் குறைந்தபட்சம் 3 நாட்கள் வரை வாடாமல் இருக்கும். ஸ்பாஞ்சில் இருக்கும் நீரின் தன்மையால் பூங்கொத்து பிரகாசமாக காட்சிதரும்.

Next Story