ரூ.50 லட்சம் கேட்டு கோவையில் வியாபாரி கடத்தல்: ஓடும் காரில் இருந்து திருச்சியில் தள்ளி விட்டனர்
கோவையில் ரூ.50 லட்சம் கேட்டு வியாபாரி காரில் கடத்தப்பட்டார். திருச்சியில் ஓடும் காரில் இருந்து மர்ம நபர்கள் அவரை கீழே தள்ளி விட்டு சென்றனர்.
கோவை,
கோவையை சேர்ந்தவர் விஷ்ணுராஜ் (வயது 40). பூ மொத்த வியாபாரி. விஷ்ணுராஜ் நேற்று முன்தினம் அதிகாலையில் கடைக்கு சென்றார். பின்னர் அவருடைய தந்தை கோவிந்தராஜ் கடைக்கு சென்ற போது விஷ்ணுராஜை காணவில்லை. வியாபார விஷயமாக மகன் எங்காவது சென்றிருப்பார் என கருதிய கோவிந்தராஜ் வீட்டுக்கு சென்று விட்டார்.
பிற்பகலில் விஷ்ணுராஜூவின் செல்போனில் இருந்து கோவிந்தராஜூக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், ‘நாங்கள் உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம், ரூ.50 லட்சம் தந்தால் அவரை உயிரோடு விட்டு விடுவோம்’ என்று கூறி மிரட்டினர்.
மேலும், ‘நீ போலீஸ் நிலையத்துக்கு சென்றால் உன் மகனை கொன்று வீசி விடுவோம், உடனே பணத்தை தயார் செய்து விடு’ என கூறி மிரட்டியதோடு, விஷ்ணுராஜூவிடம் போனை கொடுத்து பேச செய்துள்ளனர். தந்தையிடம் பேசிய விஷ்ணுராஜ், ‘மர்மநபர்கள் என்னை கடத்தி வைத்துள்ளனர். எப்படியாவது என்னை மீட்டு செல்லுங்கள்’ என கூறியுள்ளார்.
இது குறித்து போலீசில் கோவிந்தராஜ் புகார் செய்தார். இதையடுத்து கோவிந்தராஜூவின் செல்போனை வாங்கி கடத்தல் ஆசாமிகளுடன் போலீசார் பேசி எச்சரித்துள்ளனர். இதனால் கடத்தல் ஆசாமிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை கோவிந்தராஜூக்கு மீண்டும் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘திருச்சியில் உங்கள் மகன் காயங்களுடன் கிடந்தார். அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளோம்’ என்று கூறியுள்ளார்.
உடனே போலீசார், கோவிந்தராஜை அழைத்துக்கொண்டு திருச்சி சென்றனர். அங்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த விஷ்ணுராஜூவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தன்னை காரில் கடத்திய கும்பல் அடித்து உதைத்து திருச்சியில் ஓடும் காரில் இருந்து தள்ளி விட்டு சென்றதாக கூறினார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.