காரமடை அருகே வனத்துறை வைத்த கூண்டை உடைத்து சிறுத்தைப்புலி தப்பியது


காரமடை அருகே வனத்துறை வைத்த கூண்டை உடைத்து சிறுத்தைப்புலி தப்பியது
x
தினத்தந்தி 2 July 2018 4:00 AM IST (Updated: 2 July 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

காரமடை அருகே வனத்துறை வைத்த கூண்டை உடைத்து விட்டு சிறுத்தைப்புலி தப்பியது. அப்போது கூண்டில் வைத்திருந்த ஆட்டையும் தின்று விட்டு சென்றதால் பரப்பு ஏற்பட்டு உள்ளது.

காரமடை,

கோவை மாவட்டம் காரமடை அருகே பனப்பாளையம், தோகமலை அடிவாரம், பொம்மநாயக்கர் தோட்ட பகுதியில் கடந்த சில வாரங்களாக சிறுத்தைப்புலி ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டிலேயே தஞ்சம் அடைந்து உள்ளனர். பொம்மநாயக்கர் தோட்ட பகுதியை சேர்ந்தவர் விஜயக்குமார் (வயது 46), விவசாயி. இவர் வளர்த்து வந்த 2 நாய்களை சிறுத்தைப்புலி ஒன்று அடித்து கொன்றது. இதுதவிர கடந்த மாதம் 10–ந் தேதி இவருடைய ஆட்டையும் கடித்து கொன்றது.

இதேபோன்று அந்த பகுதியில் உள்ள 10 நாய்கள், 2 ஆடுகளை சிறுத்தைப்புலி வேட்டையாடியது. இதனால் பீதி அடைந்த அப்பகுதி மக்கள் காரமடை வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து காரமடை வனச்சரகர் சரவணன், வனவர் சுரேஷ் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் பொம்மநாயக்கர் தோட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் சிறுத்தைப்புலி நடமாட்டத்தை கண்டறிய 2 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். அப்போது அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தைப்புலி உருவம் பதிவானது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் அங்கு கூண்டு வைத்தனர்.

இந்த கூண்டில் உயிருடன் ஒரு ஆட்டையும் வனத்துறையினர் கட்டி வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு ஆட்டை வேட்டையாட வந்த சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கியது. பின்னர் கூண்டில் இருந்த ஆட்டை கடித்து கொன்ற சிறுத்தைப்புலி, கூண்டின் அடிப்பகுதியில் இருந்த மரப்பலகையை உடைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியது.

நேற்று காலை கூண்டு உடைந்து கிடப்பதை கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் தப்பி ஓடிய சிறுத்தைப்புலியை பிடிப்பதற்காக அந்த பகுதியில் வேறு கூண்டு அமைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் வனச்சரகர் சரவணன் தலைமையில் வனவர் சுரேஷ், வனக்காப்பாளர்கள் முனுசாமி, சகாதேவன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய 8 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தைப்புலி தப்பியதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.


Next Story