‘சேலம் 8 வழி பசுமை சாலை வரக்கூடாது’ அம்மன் கோவிலில் மனு கொடுத்து விவசாயிகள் நூதன வழிபாடு


‘சேலம் 8 வழி பசுமை சாலை வரக்கூடாது’ அம்மன் கோவிலில் மனு கொடுத்து விவசாயிகள் நூதன வழிபாடு
x
தினத்தந்தி 2 July 2018 4:45 AM IST (Updated: 2 July 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே 8 வழி பசுமை சாலை வரக்கூடாது என்று அம்மன் கோவிலில் மனு கொடுத்து விவசாயிகள் நூதன வழிபாடு நடத்தினார்கள். மேலும் அவர்கள் மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளில் தற்போது அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் முதற்கட்டமாக நிலஅளவீடு செய்யப்பட்டு எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் அடிமலைப்புதூர், ஆச்சாங்குட்டப்பட்டி, குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி, நிலவாரப்பட்டி, பூலாவரி ஆகிய இடங்களில் அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்து எல்லைக்கல் நட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எல்லைக்கல்லை பிடுங்கியும் வீசினர். எனினும் பசுமை வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக எல்லைக்கற்கள் நடப்பட்ட இடங்களில் ‘ஹெலிகாம்‘ கேமரா மூலம் ஆய்வு பணிகளும் நடந்தது. மேலும் கோவில்கள், வீடுகள், கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றையும் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் கணக்கெடுக்கப்படுகிறது.

8 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்களில் உள்ள தென்னை, வாழை, மா, சப்போட்டா உள்பட பல்வேறு மரங்களை வேளாண்மைத்துறை அதிகாரிகளும், தேக்கு, சவுக்கு போன்ற மரங்களை வனத்துறை அதிகாரிகளும் கணக்கீடு செய்து வருகிறார்கள். இந்த பணிகள் இன்னும் சில தினங்களில் நிறைவு பெற உள்ளது.

சேலம் அருகே அயோத்தியாப்பட்டணம்-பேளூர் சாலையில் குள்ளம்பட்டியிலும் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மதியம் குள்ளம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பெரியாண்டிச்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது ஏராளமான விவசாயிகள், பெண்கள் தங்களது மாடுகளுடன் கோவிலுக்கு வந்தனர்.

அவர்கள் மாடுகளின் கொம்பில் ‘வாழ விடு, வாழ விடு, விவசாயிகளை வாழ விடு‘ என எழுதிய அட்டையை கட்டி அழைத்து வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் 8 வழி பசுமை சாலை இந்த பகுதியில் வரக்கூடாது என வேண்டி, அதனை மனுவாக எழுதி அம்மன் சிலை முன் வைத்து நூதன வழிபாடு நடத்தினார்கள். இதன் பின்னர் 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் வளாகத்தில் மாடுகளுடன் விவசாயிகள், பெண்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கைகளில் பதாகைகளையும் ஏந்தியபடி பசுமை சாலையை எதிர்த்து கோஷங்களை எழுப்பினார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் குள்ளம்பட்டிக்கு விரைந்து சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது, உரிய அனுமதி பெற்று தான் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். எனவே கலைந்து செல்லுங்கள் என்று கூறினார்கள். இதைத்தொடர்ந்து விவசாயிகள், பெண்கள் என அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story