ஜி.எஸ்.டி. சட்டவிதிகளில் குளறுபடி: வணிகர்களுக்கு அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும்


ஜி.எஸ்.டி. சட்டவிதிகளில் குளறுபடி: வணிகர்களுக்கு அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 2 July 2018 4:30 AM IST (Updated: 2 July 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. சட்டவிதிகளில் உள்ள குளறுபடிகளை களையும் வரை, வணிகர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மதுரை,

மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி. வரியை அறிமுகப்படுத்தியது. இதனால், பொதுமக்கள் அன்றாடம் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருள்கள் உள்பட அனைத்து பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்வதில் குளறுபடி இருப்பதாகவும், இதற்காக வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு வணிகர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரிக்கணக்கை ஆன்லைனில் சமர்ப்பிக்கும் படி செயல்படுத்தியுள்ளது. இதில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதனால், குளறுபடிகள் நிறைய உள்ளன. மேலும், இந்த குளறுபடிகளால் வணிகர்கள் ஜி.எஸ்.டி. சட்டங்களை தெளிவாக புரிந்து கொள்ள முடியாமல் உள்ளனர்.

ஆனால், சட்டவிதிகளை மீறும் வணிகர்களுக்கு அபராதம், வழக்கு, சிறை தண்டனை என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 21 வகையான சட்டவிதி மீறல்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருள்களுக்கு பில் கொடுக்காமல் சரக்குகளை விற்பனை செய்வது, சரக்குளை விற்பனை செய்யாமல் பில் போடுவது, போலியான தகவல்களை ஜி.எஸ்.டி. வரிக்கணக்கு தாக்கல் செய்யும்பபோது தெரிவிப்பது, வரியை அரசுக்கு செலுத்தாமல் இருப்பது உள்ளிட்ட குற்றங்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமாக செலுத்த வேண்டும்.

அத்துடன், வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகையில் ஜி.எஸ்.டி. எண்ணை குறிப்பிடாவிட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். வரிக்கணக்கை தாமதமாக செலுத்தினால் நாள் ஒன்றுக்கு ரூ.200 செலுத்த வேண்டும். சில குற்றங்களுக்கு சிறை தண்டனையும் உண்டு. ஆனால், ஜி.எஸ்.டி. சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தங்கள் குறித்த தகவல்கள் பெரும்பாலும் வணிகர்களை சென்றடைவதில்லை. எனவே, ஜி.எஸ்.டி. வரித்தாக்கலில் ஏற்படும் சட்டவிதி மீறல்களுக்கு வருகிற நிதியாண்டு வரை அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். அதேபோல, வணிகர்களுக்கு உரிய தகவல்களை காலதாமதமின்றி தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story