மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது முதல் நாளில் 40 பேருக்கு கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு


மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது முதல் நாளில் 40 பேருக்கு கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 2 July 2018 3:45 AM IST (Updated: 2 July 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாளான நேற்று 40 மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாளான நேற்று 40 மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 28-ந்தேதி வெளியானது. இதையடுத்து ஜூலை 1-ந்தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது. மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வின் முதல் நாளான நேற்று சிறப்பு பிரிவினர்களான மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு துறை மாணவர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க வந்த மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் வளாகத்தில் கூடியிருந்தனர்.

தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கு, 5 ஆயிரத்து 757 இடங்கள் உள்ளன. தரவரிசை பட்டியலில், 44 ஆயிரத்து 332 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த மருத்துவ கலந்தாய்வில் சிறப்பு பிரிவினராக விண்ணப்பித்த மாணவர்களில் 101 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.

இதில் 63 மாணவர்கள் மட்டுமே நேற்று கலந்து கொண்டனர். 38 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. காலை 9 மணிக்கு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு, 2 மணி நேரம் தாமதமாக 11 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து மாற்றுத்திறனாளி மாணவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டது.

பின்னர் அந்த மாணவர்கள் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து விளையாட்டு துறையில் சாதித்த மாணவர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் பிள்ளைகளிடம் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. பின்னர் அவர்களும் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்றனர்.

கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளை ஆர்வத்துடன் தேர்வு செய்தனர். மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வின் முதல் நாள் முடிவில் 40 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 38 மாணவர்களும், பி.டி.எஸ். படிப்புக்கு 2 மாணவர்களும், தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் 15 மாணவர்கள், மருத்துவ படிப்புக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டும், அதில் விருப்பமின்றி விலகினர். மீதமுள்ள 8 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வரும் 7-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இன்று(திங்கட்கிழமை) பொதுப் பிரிவினருக்கு நடைபெற உள்ள கலந்தாய்வில் 444 மாணவர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

Next Story