விருத்தாசலம் அருகே ஆசிரியை பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம் அருகே அரசு பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சாத்துக்கூடல் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 250–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணிபுரிந்த விருத்தாசலத்தை சேர்ந்த சமூக அறிவியல் ஆசிரியை ஆரோக்கிய செல்வி தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையறிந்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் நல்ல முறையில் பாடம் சொல்லித்தரும் ஆரோக்கிய செல்வி ஆசிரியையை வேறு பள்ளிக்கூடத்துக்கு மாற்றக்கூடாது என்று கூறி மாணவர்கள் அவர்களது பெற்றோருடன் சேர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி முன்பு போராட்டம் செய்தனர்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களின் பெற்றோர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப் பட்டது.
ஆனால் இதுவரைக்கும் ஆசிரியைக்கான பணியிட மாற்றம் ரத்து செய்யப்படவில்லை. இதையடுத்து பள்ளியின் முன்பு மாணவர்களுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்ய போவதாக அவர்களது பெற்றோர் அறிவித்தனர்.
இதன் காரணமாக, பள்ளியின் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இருந்த போதிலும், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் பள்ளி முன்பு ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள், விருத்தாசலம்– தீவனூர் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் விருத்தாசலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அடுத்த வாரத்திற்குள் ஆசிரியை பணியிட மாற்றத்தை ரத்து செய்து அவர் இதே பள்ளியில் தொடர்ந்து பணி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் எங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று போலீசாரிடம் மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.
இதுபற்றி கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.