தூத்துக்குடி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையம் இந்த மாத இறுதிக்குள் செயல்படும் - விமான நிலைய இயக்குனர்
தூத்துக்குடி விமான நிலையத்தில், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையம் இந்த மாத இறுதிக்குள் செயல்பட தொடங்கும் என்று விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் கூறினார்.
தூத்துக்குடி,
இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
தூத்துக்குடி- பெங்களூரு இடையேயான விமான சேவை தொடங்கி உள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். தூத்துக்குடி விமான நிலையம் ஏற்கனவே சென்னை சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டு இருந்தது. தற்போது பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துடனும் இணைக்கப்பட்டு இருப்பது தூத்துக்குடி மக்களுக்கு வரப்பிரசாதம் ஆகும்.
மேலும் வருகிற 26-ந் தேதி முதல் மற்றொரு விமான நிறுவனம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 3 சேவையை தொடங்குகிறது. அந்த நிறுவனத்துக்கான அலுவலகம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் வசதி இல்லாததால், சென்னையில் இருந்து எரிபொருள் நிரப்பி வந்தன.
தற்போது இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் தூத்துக்குடி விமான நிலையத்தில் 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் நிரப்பும் நிலையத்தை அமைத்து உள்ளது. இந்த நிலையம் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி பெற்று இந்த மாத இறுதிக்குள் செயல்பட தொடங்கும்.
விமான நிலையம் விரிவாக்கத்துக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாநில அரசிடம் 600 ஏக்கர் நிலம் கேட்டு இருந்தோம். இதில் 410 ஏக்கர் நிலம் தந்து உள்ளார்கள். மீதம் உள்ள 190 ஏக்கர் விரைவில் தருவதாக கூறி உள்ளார்கள். தற்போது 1,350 நீளம், 30 மீட்டர் அகலம் கொண்ட ஓடுதளம் அமைந்து உள்ளது. இந்த ஓடுதளம் 3,155 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் கொண்டதாக மாற்றப்படும். தற்போது பம்பாடியா, ஏ.டி.ஆர். வகை விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு ஏ321 வகை விமானங்கள் வந்து செல்லும். விரிவாக்கம் பணிகள் முடிக்கப்படும் போது, இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்குவதற்கான வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story