கவர்னர் கிரண்பெடி ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்: பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் குற்றச்சாட்டு
கவர்னர் கிரண்பெடி ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார். இது குறித்து மத்திய உள்துறை மந்திரியிடம் புகார் செய்வோம் என்று பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை சாரம் அவ்வைத்திடலில் இந்து முன்னணி சார்பில் தேச ஒற்றுமை மாநில மாநாடு நடந்தது. இதற்காக அந்த பகுதியில் கொடிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. கவர்னர் உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் அதனை அகற்றினர்.
இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக கவர்னர் கிரண்பெடி செயல்படுகிறார். எந்த கட்சியாக இருந்தாலும் மாநாடு, பொதுக்கூட்டங்கள் நடத்தும்போது பேனர்கள், கொடிகள் கட்டுவது வழக்கம்தான். அதேபோல் தான் இந்து முன்னணி மாநாட்டிற்காக பேனர்கள், கொடிகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் அதனை அகற்ற வேண்டும் என கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார். இந்து இயக்கங்களுக்கு எதிராக, பா.ஜ.க.வுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
புதுவையில் தற்போது கஞ்சா, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை ஜோராக நடக்கிறது. போலி பத்திரம் பதிவு ஆளும் கட்சியினர் உதவியுடன் செய்யப்படுகிறது. இதனை தடுக்க கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது பல்வேறு புகார்கள் கூறியும் கவர்னர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கவர்னரின் நடவடிக்கை ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ளது. கவர்னரின் செயல்பாடு குறித்து மத்திய உள்துறை மந்திரியிடம் புகார் தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.