இளம்பெண்ணுக்கு சூடுவைத்து சித்ரவதை கணவர்-மாமனார் கைது


இளம்பெண்ணுக்கு சூடுவைத்து சித்ரவதை கணவர்-மாமனார் கைது
x
தினத்தந்தி 2 July 2018 3:45 AM IST (Updated: 2 July 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழியில் இளம்பெண்ணுக்கு சூடுவைத்து சித்ரவதை செய்யப்பட்டார். இதையொட்டி கணவர்-மாமனார் கைது செய்யப்பட்டனர்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி வில்லவிளை பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவருடைய மகள் அமுதா (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் யோபு, கொத்தனார். இவருடைய மகன் தேவசகாய டேவிட்(28), செங்கல் சூளை தொழிலாளி. தேவசகாய டேவிட்டிற்கும், அமுதாவிற்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

தேவசகாய டேவிட்டுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் தினமும் மதுகுடித்துவிட்டு வந்து குடும்ப செலவிற்கு பணம் தராமல் அமுதாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று தேவசகாய டேவிட் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்து நள்ளிரவில் தூங்கிக்கொண்ருந்த அமுதாவின் காலில் சமையல் கரண்டியால் சூடுவைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அமுதா அலறித்துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த அமுதாவின் பாட்டி முத்தாச்சி, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அமுதா பாட்டி வீட்டில் இருந்து வந்தார்.

இதற்கிடையே முத்தாச்சி வீட்டுக்கு நேற்று முன்தினம் தேவசகாய டேவிட் மற்றும் யோபுவும் சென்று, அமுதாவை வீட்டுக்கு ஏன் அனுப்பவில்லை என்று கேட்டு முத்தாச்சியிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அமுதா, முத்தாச்சி ஆகியோரை தேவசகாய டேவிட், யோபு ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேவசகாய டேவிட், யோபு ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story