தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் சிமெண்டு நிறுவன ஊழியர் பலி 2 பேர் படுகாயம்


தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் சிமெண்டு நிறுவன ஊழியர் பலி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 2 July 2018 3:45 AM IST (Updated: 2 July 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் சிமெண்டு நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கரூர்,

கரூர் வெங்கமேடு வி.வி.ஜி.நகரை சேர்ந்தவர் ராஜா(வயது 25). இவர், வெள்ளியணை அருகே உள்ள ஒரு சிமெண்டு நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் கிரிதரண்(26), சவுந்தர்(25) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் ராஜா வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை சவுந்தர் ஓட்ட, பின்னால் மற்ற 2 பேரும் அமர்ந்து இருந்தனர். வெங்கமேடு பஜார் பகுதியில் வந்தபோது திடீரென நிலைதடுமாறி சாலை மைய தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு கீழே விழுந்த ராஜா, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கிரிதரண், சவுந்தர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து கிரிதரண், சவுந்தரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் மோட்டார் சைக்கிள் விபத்து சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்து வருகிறது. அதில் இளைஞர்களின் இறப்பு அடிக்கடி நிகழ்வதாக மாவட்ட போலீஸ் தரப்பு புள்ளி விவரங்கள் சுட்டி காட்டுகின்றன. எனவே இளைஞர்களிடையே வாகன விதிகள் குறித்து எடுத்துரைத்து விபத்துகளை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story