விலை உயர்வுக்கு மூலக் காரணமான பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் தமிமுன் அன்சாரி பேட்டி


விலை உயர்வுக்கு மூலக் காரணமான பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் தமிமுன் அன்சாரி பேட்டி
x
தினத்தந்தி 2 July 2018 4:30 AM IST (Updated: 2 July 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

விலை உயர்வுக்கு மூலக் காரணமான பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என புதுக்கோட்டையில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டைக்கு நேற்று வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு முரண்டு பிடிக்காமல் 3 மாநிலத்தின் நியாயமான உரிமையை மதித்து, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். கர்நாடக அரசு காவிரி விவகாரத்தில் தொடர்ந்து துரோகம் இழைத்து வந்தால், உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைத்தாலும் 39 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும். ஜி.எஸ்.டி. வரியால் ஒட்டுமொத்த வர்த்தகமும் பாதிக்கப்பட்டு உள்ளது. பல நாடுகளில் ஜி.எஸ்.டி.யை ரத்து செய்யக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜி.எஸ்.டி.யால் எந்த ஒரு பயனும் இல்லை. ஜி.எஸ்.டி.யை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் ஒட்டுமொத்த வரியையும் 10 சதவீதத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு போடப்படும் வரி உயர்வை குறைக்க வேண்டும். தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மறைமுகமாக விலைவாசி ஏற்றத்திற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மூலக் காரணமாக உள்ளது. தமிழ்நாடு மட்டும் அல்ல இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story