5-ந்தேதி பட்ஜெட் தாக்கல் ஆகிறது: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை இன்று கூடுகிறது


5-ந்தேதி பட்ஜெட் தாக்கல் ஆகிறது: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை இன்று கூடுகிறது
x
தினத்தந்தி 2 July 2018 5:29 AM IST (Updated: 2 July 2018 5:29 AM IST)
t-max-icont-min-icon

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை இன்று (திங்கட் கிழமை) கூடுகிறது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரை நிகழ்த்துகிறார். வருகிற 5-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

இதைதொடர்ந்து காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் பதவி ஏற்றனர். இதையடுத்து இரு கட்சிகளிலும் இலாகாக்களை பங்கீடுவதில் பிரச்சினை நிலவியது. மேலும் மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். கட்சி தலைவர்கள் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து அவர்கள் அமைதியாக இருந்து வருகிறார்கள்.

இந்தநிலையில் முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அதாவது, கடந்த காங்கிரஸ் கட்சி அரசு தாக்கல் செய்த பட்ஜெட் போதுமானது. வேண்டுமென்றால் இணைப்பு பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம் என்று அவர் கருத்து தெரிவித்து இருந்தார். மேலும் இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கடினம் என்று சித்தராமையா கூறியதாக வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக சித்தராமையாவுக்கும், குமாரசாமிக்கும் இடையே மறைமுகமான மோதல் உண்டானது. இதனால் கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்வது உறுதி என்று அறிவித்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள், சித்தராமையாவை சமாதானப்படுத்தினர். இருப்பினும் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி கட்சி தலைவர்களுக்குள் மோதல்போக்கு இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) பகல் 12.30 மணிக்கு கூடுகிறது. இன்று தொடங்கும் இந்த சட்டசபை கூட்டம் வருகிற 12-ந்தேதி வரை விடுமுறை நாட்களை தவிர்த்து 9 நாள் நடக்கிறது.

புதிய அரசு அமைந்ததை தொடர்ந்து சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னரின் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி இன்று தொடங்கும் சட்டசபையின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரை நிகழ்த்துகிறார். இதில் கூட்டணி அரசின் எதிர்கால திட்டங்கள் என்ன?, விவசாய கடன் தள்ளுபடி என்பது உள்பட பல்வேறு புதிய விஷயங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தை தொடர்ந்து சட்டசபை மற்றும் மேல்-சபை தனித்தனியாக கூடுகிறது. அதில் முன்னாள் உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

அதைத்தொடர்ந்து இருசபைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது. நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சட்டசபையின் 2-வது நாள் கூட்டம் நடக்கிறது. அதில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட உள்ளது. அந்த விவாதம் 2 நாட்கள் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் வருகிற 5-ந் தேதி 2018-19-ம் ஆண்டுக் கான கர்நாடக பட்ஜெட்டை நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்கிறார். அதில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகிறது. விவசாய கடன் தள்ளுபடி குறித்து பட்ஜெட்டில் தெரிவிக்கப்படும் என்று குமாரசாமி ஏற்கனவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகத்தில் ரூ.53 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்யுமாறு பா.ஜனதா ஏற்கனவே வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜனதா போராட்டத்தையும் நடத்தி இருக்கிறது. இந்த கடன் தள்ளுபடி குறித்து சட்டசபையில் பிரச்சினையை கிளப்ப பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. தற்போது இரு கட்சிகள் ஆளுங்கட்சி வரிசையில் உள்ள இருக்கையில் அமருவதால், சட்டசபையில் பா.ஜனதா மட்டுமே எதிர்க் கட்சியாக திகழும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பா.ஜனதா எழுப்பும் பிரச்சினைக்கு தக்க பதில் கொடுக்க குமாரசாமியும், மந்திரிகளும் தயாராகியுள்ளனர்.

சட்டசபை கூட்டம் இன்று தொடங்குவதையொட்டி விதானசவுதா கூட்ட அரங்கில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மேலும் விதானசவுதா வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story