தோவாளை அருகே என்ஜின் பழுதாகி சரக்கு ரெயில் நடுவழியில் நின்றது


தோவாளை அருகே என்ஜின் பழுதாகி சரக்கு ரெயில் நடுவழியில் நின்றது
x
தினத்தந்தி 3 July 2018 3:45 AM IST (Updated: 2 July 2018 10:30 PM IST)
t-max-icont-min-icon

தோவாளை அருகே சரக்கு ரெயில் என்ஜின் பழுதாகி நடுவழியில் நின்றதால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமானது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

ஆரல்வாய்மொழி,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ரெயில் நெல்லை மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் நேற்று காலை 5 மணியளவில் தோவாளை அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த ரெயிலின் என்ஜினில் பழுது ஏற்பட்டது. என்ஜின் டிரைவர் எவ்வளவோ முயற்சி செய்தும் ரெயிலை தொடர்ந்து இயக்க முடியவில்லை. இதனால் ரெயில் நடுவழியில் நின்றது.  

 இச்சம்பவம் பற்றி என்ஜின் டிரைவர், நாகர்கோவில் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அதிகாரிகள் மற்றும் என்ஜின் பழுதுநீக்கும் ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். பழுதான என்ஜினை அவர்கள் ஆய்வு செய்தனர். ஆனால் என்ஜினில் ஏற்பட்ட கோளாறை உடனடியாக சரிசெய்ய இயலாத நிலை ஏற்பட்டது.

 சரக்கு ரெயில் பழுதாகி நின்ற வழியை கடந்து தான் மற்ற ரெயில்கள் நாகர்கோவில் வர இயலும். அதே போல் நாகர்கோவிலில் இருந்து நெல்லை மார்க்கமாக செல்லும் ரெயில்களும் அந்த வழியை கடத்து தான் செல்ல வேண்டும். இதனால் நாகர்கோவிலுக்கு மற்ற ரெயில்கள் வரவும், நாகர்கோவிலில் இருந்து புறப்படவும் இயலவில்லை.

இதனையடுத்து நாகர்கோவிலில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டது. பின்னர் மாற்று என்ஜின் மூலம் சரக்கு ரெயிலை இயக்கி ஆரல்வாய்மொழிக்கு கொண்டு சென்று ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு என்ஜின் பழுதை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

சரக்கு ரெயில் பழுதாகி நடுவழியில் நின்றதால் நாகர்கோவிலுக்கு வரவேண்டிய 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக வந்தன. அதாவது சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு காலை 6.30 வரவேண்டும். ஆனால் இந்த ரெயில் 1½ மணி நேரம் தாமதமாக 8 மணிக்கு வந்தது.

இதே போல் காலை 9.30 மணிக்கு வரவேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ்  ஒரு மணி நேரம் தாமதமாக 10.30 மணிக்கு வந்தடைந்தது. மேலும், பெங்களூருவில் இருந்து காலை 8 மணிக்கு நாகர்கோவில் வர வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயிலும் ஒரு மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு வந்தது.

இதுபோன்று நாகர்கோ விலில் இருந்து மும்பைக்கு காலை 6.30 மணிக்கு புறப்பட வேண்டிய மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் சரக்கு ரெயில் பழுது காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக 7.30 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. ரெயில்கள் தாமதம் காரணமாக பயணிகள் அவதி யடைந்தனர்.

Next Story