8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு: வீடுகள், விவசாய நிலங்களில் கருப்புக்கொடி கட்டிய கிராமமக்கள்


8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு: வீடுகள், விவசாய நிலங்களில் கருப்புக்கொடி கட்டிய கிராமமக்கள்
x
தினத்தந்தி 3 July 2018 4:55 AM IST (Updated: 3 July 2018 4:55 AM IST)
t-max-icont-min-icon

8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள், விவசாய நிலங்களில் கிராம மக்கள் கருப்புக்கொடி கட்டினர்.

அரூர்,

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலையால் தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக அமைக்கப்படுகிறது. இதில் விவசாய நிலங்கள், வீடுகள், பள்ளிகள் கையகப்படுத்துவதற்கும், நிலம் அளவீடு செய்வதற்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் நிலங்கள், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தீக்குளிக்கவும் முயன்றனர். இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் நிலம் அளவீடு செய்யும் பணி முடிவடைந்தது. தற்போது வருவாய்த்துறை மூலம் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்படுகிறது. தென்னை மரங்கள், கிணறுகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் அரூர் அருகே உள்ள மாலகப்பாடி உள்பட 5 இடங்களில் தனிநபர் நிலம் ஆய்வு செய்வதற்கு நேற்று அலுவலர்கள் சென்றனர். மாலகப்பாடி கிராமத்தில் பொதுமக்கள், நிலம் ஆய்வு செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த கிராமத்தில் 40 வீடுகள், 3 கோவில்கள், 70 ஏக்கர் விவசாய நிலம் 8 வழி பசுமைச்சாலைக்கு கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்படுவார்கள்.

எனவே 8 வழி பசுமைச்சாலை அமைக்கும் பணியை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அலுவலர்கள் ஆய்வு செய்யாமல் அங்கிருந்து திரும்பி சென்றனர். நிலம் அளவீடு மற்றும் ஆய்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் வீடுகள், விளை நிலங்கள், சாலையோரம் கறுப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

Next Story