இலவச வீட்டுமனைக்கான பயனாளிகள் பட்டியலை மறு ஆய்வு செய்ய வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு


இலவச வீட்டுமனைக்கான பயனாளிகள் பட்டியலை மறு ஆய்வு செய்ய வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 2 July 2018 11:30 PM GMT (Updated: 2 July 2018 11:30 PM GMT)

இலவச வீட்டுமனை வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கொண்டகரஅள்ளி கிராம மக்கள், குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்(சிப்காட்) துர்காமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்கள். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அவர்கள் உத்தரவிட்டனர். இந்த கூட்டத்தில் வீட்டுமனைப்பட்டா, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வங்கிகடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

இந்த கூட்டத்தில் கொண்டகரஅள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களில் சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனைகள் வழங்க பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் வசதி படைத்தவர்கள், அரசு பணியில் இருப்பவர்கள் பெயர்கள் இடம் பெற்று உள்ளன. ஏற்கனவே இலவச வீட்டுமனையை வாங்கியவர்களின் பெயர்களும் உள்ளன. எனவே இந்த பயனாளிகளின் பட்டியலை மறு ஆய்வு செய்ய வேண்டும். சொந்தவீடு இல்லாதவர்கள், ஏழ்மை நிலையில் உள்ளவர்களை இந்த பட்டியலில் இடம்பெற செய்து அதன்படி இலவச வீட்டுமனைகள் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சிலர் கொடுத்த கோரிக்கை மனுவில், தர்மபுரி-ஓசூர் இடையே 4 வழிசாலை விரிவாக்க பணிக்காக நிலம் வழங்குபவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு கல்வித்தகுதிக்கேற்ப அரசு பணி வழங்க வேண்டும். சாலைக்கு நிலம் எடுக்கும் பரப்புக்கு ஏற்றவாறு வாடகை வழங்க வேண்டும். கையகப்படுத்தப்படும் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், வீடுகள், மரங்களுக்கு அதிகபட்ச இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். சாலை விரிவாக்கத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கினால் பத்திரவு பதிவு முத்திரைதாள் செலவினை முழுமையாக அரசே ஏற்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

தர்மபுரி அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், தர்மபுரி பைபாஸ் சாலையோரத்தில் எங்கள் பகுதியை சேர்ந்த 90-க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுமனைகள் வழங்கப்பட்டன. இந்த வீட்டுமனைகளுக்குரிய இடம் இதுவரை அளந்து தரப்படவில்லை. அந்த நிலத்தை 4 வழி சாலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்த கூடாது. விரைவாக அளவீடு செய்து எங்களுக்கு நிலத்தை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

Next Story