தூத்துக்குடியில் மக்களை சுட்டு படுகொலை செய்த “போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யாதது கண்டனத்துக்குரியது”


தூத்துக்குடியில் மக்களை சுட்டு படுகொலை செய்த “போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யாதது கண்டனத்துக்குரியது”
x
தினத்தந்தி 3 July 2018 5:44 AM IST (Updated: 3 July 2018 5:44 AM IST)
t-max-icont-min-icon

“தூத்துக்குடியில் மக்களை சுட்டு படுகொலை செய்த போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யாதது கடும் கண்டனத்துக்குரியது“ என வைகோ கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி வரலாற்றில் 22-ந் தேதி என்பது மிகவும் துக்ககரமான, ரத்தக்கறை படிந்த நாள் ஆகும். இதற்கு முன்பு 15 ஆயிரம், 20 ஆயிரம் பேரை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தினோம். அப்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதாக போலீசார் அறிவித்தார்கள். மண்டபம் இல்லாததால் நாங்கள் அப்படியே அமர்ந்தோம். அப்படி ஒரு அணுகுமுறையை போலீசார் கடைபிடிக்காமல் வருகிறவர்களை சுட்டுக் கொன்று, அச்சுறுத்தி உள்ளனர்.

இது அறவழிப்போராட்டம் நடத்தும் சிந்தனை கூட வரக்கூடாது என்ற நோக்கத்தில் தமிழக அரசு இந்த பிரச்சினையை கையாண்டு இருக்கிறது. இது திட்டமிட்ட படுகொலை. இன்னும் போலீசார் மிரட்டுவது, வழக்கு போட முயற்சி செய்வது, கட்சி தலைவர்களை உள்ளே வர அனுமதி மறுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மக்கள் வன்முறையில் ஈடுபடும் எண்ணத்திலும் இல்லை. அவர்கள் வன்முறையில் ஈடுபடவும் இல்லை. எல்லா சமுதாயத்தை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக கடற்கரை ஓரத்தில் வாழும் திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிரட்டப்படுகின்றனர். அவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடமாட்டார்கள்.

ஸ்டெர்லைட் பிரச்சினையில் எந்த பெரிய வெற்றியும் கிடைத்து விடவில்லை. சரியான காரணங்களை கூறி கொள்கை முடிவு எடுக்காமல், மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு அடிப்படையில் நிரந்தரமாக மூடுவதாக அரசு தெரிவித்து உள்ளது. என்னை பொறுத்தவரை இந்த பிரச்சினை மதில் மேல் பூனையாகத்தான் இருக்கிறது. மீண்டும் அதே போன்ற நிலைமை வரலாம். ஆலை நிர்வாகம் கோர்ட்டுக்கும் செல்லலாம். எந்த வழியிலாவது மீண்டும் ஆலையை திறந்து விடுவோம் என்ற மமதையோடு, ஆலையை நடத்துவோம் என்று கூறும் நிலைமை ஆலை தரப்பில் உள்ளது.

தற்போது பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். மக்களை சுட்டு படுகொலை செய்த போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். வழக்கு பதியாமல் கொலையை நியாயப்படுத்தி வருவதை ஏற்க முடியாது. இது கடும் கண்டனத்துக்குரியது. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக சத்குரு, பாபா ராமதேவ் ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர். அவர்கள் உலக கோடீசுவரருக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள். அவர்களை கண்டுகொள்ள வேண்டியது இல்லை.

காவிரி பிரச்சினையில் நாம் ஏற்கனவே வஞ்சிக்கப்பட்டு உள்ளோம். அந்த தீர்ப்பு வஞ்சகமான தீர்ப்பு. காவிரி நடுவர் மன்றம் கூறுவது போன்ற அதிகாரம் காவிரி ஆணையத்துக்கு கிடையாது. காவிரி நீரின் அளவையும் குறைத்து விட்டார்கள். நாம் தான் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும். ஆனால் கர்நாடகா தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

இவ்வாறு வைகோ கூறினார்.

முன்னதாக, கடந்த 2009-ம் ஆண்டு அனல்மின்நிலைய அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை மற்றும் நிதித்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி உருவப்படத்தை எரித்த வழக்கில் நேற்று தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 56 பேர் ஆஜராகினர்.

அப்போது, அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அதன்பிறகு வழக்கு விசாரணையை வருகிற 6-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு பிஸ்மிதா தள்ளிவைத்தார். அன்றைய தினம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன. 

Next Story