கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 3 July 2018 5:44 AM IST (Updated: 3 July 2018 5:44 AM IST)
t-max-icont-min-icon

கோவில்கள் கட்டுமான பணிக்கு தேவையான மணலை கொள்ளிடம் ஆற்றில் இருந்து எடுத்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 287 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர்.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

வடிகால் வசதி செய்து தர வேண்டும்

பெரம்பலூர் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் கலெக்டரிடம் மனு ஒன்றை கொடுத்தார். அதில், அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் இயங்கி வரும் சிமெண்டு ஆலைகளுக்கு அருகில் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கங்களிலிருந்து லாரிகள் மூலம் சுண்ணாம்புக்கற்கள் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் போது, லாரிகளின் வெளிப்பகுதி மற்றும் டயர்களில் ஒட்டிவரும் மண் சாலைகளில் சிந்துவதால் சாலை முழுவதும் மண்ணாகி, பின்னர் புழுதியாக பறக்கிறது. இதன் காரணமாக விபத்துக்கள் அதிகமாக நடப்பதால், சுரங்க விதிகளின் படி சுரங்கங்களிலிருந்து சுண்ணாம்புக்கல் ஏற்றி சாலைக்கு வரும் லாரிகளை கழுவி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்துறை நகரில் சாலையின் இருபுறமும் மூடியுடன் கூடிய வடிகால் வசதி செய்து தர வேண்டும்.

குணமங்கலம் காலனி தெருவில் வசிக்கும் பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், எங்களது தெருவில் மாரியம்மன், காளியம்மன், பிள்ளையார், கருப்பு சாமி என மொத்தம் 7 கோவில்கள் மிக பழமை வாய்ந்ததாகவும், தற்போது சிதைந்த நிலையிலும் உள்ளது. எனவே ஊர் பொதுமக்கள் சார்பில், இந்த கோவில்கள் கட்ட முடிவெடுத்து வருகிறோம். இக் கோவில் கட்டுமான பணிக்கு தேவையான மணலை ஊருக்கு அருகில் இருக்கும் கொள்ளிடம் ஆற்றில் எடுத்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

பின்னர் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலரான பாலாஜிக்கு உத்தரவிட்டார். இதில் சமூக பாதுகாப்புத்திட்ட துணை கலெக்டர் பூங்கோதை, துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story