கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் மறியலுக்கு முயன்ற 111 பேர் கைது


கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் மறியலுக்கு முயன்ற 111 பேர் கைது
x
தினத்தந்தி 3 July 2018 5:50 AM IST (Updated: 3 July 2018 5:50 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் மறியலுக்கு முயன்ற 111 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்,

உச்சநீதிமன்ற தீர்ப்பானது ஆதிதிராவிடர்- பழங்குடியினர் வன்கொடுமைகள் (எஸ்.சி, எஸ்.டி.) தடுப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் உள்ளது. எனவே வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தி அவசர சட்டம் இயற்ற வேண்டும். இதனை அரசியல் சாசனம் 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும். அனைத்து கோவில்களிலும் ஆதிதிராவிட- பழங்குடியின மக்களுக்கு ஆலய வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உண்மை நிலையை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வக்கீல் ஜெயராமன், ஆதி தமிழர் பேரவை நிர்வாகி முல்லை அரசு உள்பட பல்வேறு கட்சி, அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று ரெயிலை மறிப்பதற்காக கரூர் ரெயில் நிலையத்தை நோக்கி வந்தனர்.

பாதுகாப்பு

அப்போது அங்கு ரெயில் நிலைய நுழைவு வாயிலில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கும்மராஜா, முத்தமிழ்செல்வன் உள்பட போலீசார் இரும்பு தடுப்புவேலிகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் ரெயிலை மறிப்பதற்காக மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியபடி வந்த போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். இதில் 11 பெண்கள் உள்பட 53 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் குளித்தலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜூ தலைமையில் இக்கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் மறியல் செய்வதற்காக குளித்தலை பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக ரெயில் நிலையம் நோக்கி நேற்று காலை சென்றனர். ஏற்கனவே அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார் அவர்களை ரெயில் நிலையத்திற்கு முன்பே தடுத்து நிறுத்தினர். இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தரையில் அமர்ந்தபடி போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 9 பெண்கள் உள்பட 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை தொடர்ந்து அதே கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் (கிழக்கு) மாவட்ட செயலாளர் தேவேந்திரன் தலைமையில் ரெயில் மறியலில் ஈடுபட வந்த ஒரு பெண் உள்பட 22 பேரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மொத்தம் 111 பேரும் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். 

Next Story