வன்கொடுமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி ரெயில் மறியலுக்கு முயன்ற 301 பேர் கைது


வன்கொடுமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி ரெயில் மறியலுக்கு முயன்ற 301 பேர் கைது
x
தினத்தந்தி 3 July 2018 5:51 AM IST (Updated: 3 July 2018 5:51 AM IST)
t-max-icont-min-icon

வன்கொடுமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி கோவையில் ரெயில் மறியலுக்கு முயன்ற ஜி.ராமகிருஷ்ணன் உள்பட 301 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை,

வன்கொடுமை சட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் திருத்தம் செய்வதை திரும்ப பெறக்கோரியும், இந்த சட்டத்துக்கு வலுசேர்க்க கோரியும் கோவையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், ஆதி தமிழர் பேரவை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இருந்தன. அதன்படி நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் ரெயில் மறியல் செய்ய ஊர்வலமாக சென்றனர்.

அவர்கள் கோஷங்கள் எழுப்பியபடி கோவை ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் ரெயில் மறியலுக்கு முயன்றவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்கள், ரெயில் நிலையம் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக போராட்டத்தில் கலந்து கொண்ட ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

கடந்த 4 ஆண்டு கால மத்திய பாரதீய ஜனதா ஆட்சியில் தலித்துகள் மீதான வன்கொடுமை 66 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 15 நிமிடங்களுக்கு ஒருமுறை வன்கொடுமை நடைபெற்று வரு கிறது பீகார், உத்தரபிரதேசம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி ஒருவர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இருந்தால் முதலில் போலீஸ் சூப்பிரண்டிடம் அனுமதி பெற்ற பின்புதான் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

அவர் அரசு அதிகாரியாக இருப்பின் அவரது உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்ற பின்னர்தான் கைது செய்ய வேண்டும் என்றும் மேலும் நீதிமன்றம் கருதினால் முன்ஜாமீன் அளிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே தலித்துகள் மீதான வன்கொடுமை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே சுப்ரீம்கோர்ட்டு அரசியல் சாசனப்படி இந்த சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் எங்களது போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மறியல் போராட்டத்தில் முன்னாள் எம்.பி. பி.ஆர். நடராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் சுசிகலையரசன், ஆதிதமிழர் பேரவை துணை பொது செயலாளர் ரவிக்குமார், திராவிடர் விடுதலை கழக நகர தலைவர் நேருதாஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சிவஞானம், அனைத்திந்திய மாதர் சங்க நிர்வாகி அமிர்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 48 பெண்கள் உள்பட 301 பேரை போலீசார் கைது செய்து ஒரு மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story