தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவு: தேவேகவுடாவுடன் கலந்து ஆலோசித்து முடிவு டி.கே.சிவக்குமார் பேட்டி
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து தேவேகவுடாவுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு,
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான 34 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்திற்கு தண்ணீரை திறக்குமாறு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுபற்றி என்னிடம் முழு தகவல்கள் இல்லை. அந்த கூட்டத்தில் கர்நாடகம் சார்பில் கலந்துகொண்ட அதிகாரிகளுடன் பேசிய பிறகு இதுபற்றி கருத்து தெரிவிக்கிறேன். இப்போது அவசரகதியில் என்னால் எதையும் கூற முடியாது.
கலந்து ஆலோசித்து முடிவு
தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழகம் கேட்கிறது. நம்மிடம் நீர் வேண்டும் அல்லவா? காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவு குறித்து தேவேகவுடா, முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரிகள் பசவராஜ் பொம்மை, எம்.பி.பட்டீல் ஆகியோரிடம் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகத்தின் நிலையை நமது அதிகாரிகள் எடுத்து கூறி இருக்கிறார்கள். காவிரி படுகையில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் கூட்டம் வருகிற 10-ந் தேதிக்குள் நடத்தப்படும். இதில் விரிவாக ஆலோசனை நடத்தி ஒரு அறிக்கை தயாரிக்கப்படும். அதில் உரிய முடிவு எடுக்கப்படும். விவசாயிகளின் நலனில் கூட்டணி அரசு அதிக அக்கறை செலுத்துகிறது.”
இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
பசவராஜ் பொம்மை
முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரியும், பா.ஜனதாவை சேர்ந்தவருமான பசவராஜ் பொம்மை எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசுக்கு அடிக்கடி ஆலோசனை கூற ஒரு தொழில்நுட்ப குழுவை அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் விரைவாக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். சட்ட போராட்டத்தின் மூலம் நியாயத்தை பெற வேண்டும். இந்த விஷயத்தில் கர்நாடக மக்களின் நலனை காக்கும் நோக்கத்தில் மாநில அரசு எடுக்கும் முடிவை பா.ஜனதா ஆதரிக்கிறது“ என்றார்.
Related Tags :
Next Story