தாராபுரம் அருகே: பனியன் நிறுவன வேன் கவிழ்ந்து 2 பெண் தொழிலாளர்கள் பலி
தாராபுரம் அருகே டயர் வெடித்து பனியன் நிறுவன வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 23 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாராபுரம்,
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பனியன் நிறுவனங்களில் திருப்பூர், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களும், பிற மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களும் வேலை பார்த்து வருகிறார்கள். நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களில் தொழிலாளர்களை காலையில் ஏற்றி வருவதும், பின்னர் வேலை முடிந்ததும் அதே வாகனத்தில் அவர்களை அந்தந்த ஊர்களில் கொண்டு விடுவதையும் பனியன் நிறுவனத்தினர் வழக்கமாக கொண்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தாராபுரம்-கரூர் சாலையில் காளிபாளையத்தில் பாப்பீஸ் என்ற பெயரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை நிறுவனம் திருப்பூரில் உள்ளது. காளிபாளையத்தில் உள்ள நிறுவனம் 3 ஷிப்டுகளாக இயக்கப்படுகிறது. இந்த 3 ஷிப்டிலும் மொத்தம் 450 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலான தொழிலாளர்கள் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள்.
இந்த தொழிலாளர்களை பனியன் நிறுவனத்திற்கு சொந்தமான வேன்களில் காலையில் அழைத்து வருவதும் பின்னர் மாலையில் பணி முடிந்ததும் அதே வேனில் கொண்டு விடுவதும் வழக்கம். அதன்படி நேற்று காலையில் வழக்கம் போல் தொழிலாளர்களை அழைத்து வர பாப்பீஸ் பனியன் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சொந்தமான வேன் ஒன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு சென்றது. பின்னர் அந்த பகுதியில் சுற்றுவட்டார கிராமப்புறத்தில் உள்ள தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு காளிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்த வேனை ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்த புவனேஸ்வரன் (வயது 25) என்பவர் ஓட்டி வந்தார். வேனில் டிரைவரோடு சேர்த்து மொத்தம் 26 பேர் இருந்தனர். இந்த வேன் பழனி-தாராபுரம் சாலையில் மேட்டுப்பட்டி காக்காதோப்பு அருகே வரும்போது திடீரென்று வேனின் டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் 4 முறை உருண்டு தலைகுப்புற கவிழ்ந்தது. வேனுக்குள் இருந்த தொழிலாளர்கள் “காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...” என்று அபயக்குரல் எழுப்பினார்கள். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிச்சென்று விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்றனர்.
அதற்குள் வேனில் இருந்த திண்டுக்கல் மாவட்டம் கோடங்கிபட்டியை சேர்ந்த வீரம்மாள் என்ற பாப்பாத்தி (50) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதையடுத்து பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மற்ற தொழிலாளர்களை பொதுமக்கள் மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் ஒட்டன்சத்திரம் பொருளூர் புளியம்பட்டியை சேர்ந்த பார்வதி (38) என்பவர் இறந்தார்.
இதையடுத்து தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் காயமடைந்த பொருளூரை சேர்ந்த மாரியம்மாள் (38), ஈஸ்வரி (25), மேட்டுப்பட்டியை சேர்ந்த காளஸ்வரி (19), தீபா (25), மகேஸ்வரி (35), பிரவீணா (19), ராஜகுமாரி (29), செல்வி (35) மற்றொரு மகேஸ்வரி (26), ஈஸ்வரன்பட்டியை சேர்ந்த குப்பமுத்து (26), தேவத்தூரை சேர்ந்த சூர்யா (25), மஞ்சநாயக்கபட்டியை சேர்ந்த ரஞ்சிதா (35), வாகறையை சேர்ந்த கனிமொழி (20) உள்பட 23 பேர் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்களில் 4 பேரை தவிர மற்றவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து தொடர்பாக கள்ளிமந்தையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விபத்து நடந்ததும் டிரைவர் தப்பி ஓடி விட்டதால் அவரை போலீசார் தேடி வருகிறார்கள். பனியன் நிறுவனத்திற்கு சொந்தமான வேன் கவிழ்ந்து 2 பெண் தொழிலாளர்கள் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story