கூடுதல் பள்ளிக்கட்டிடம் கேட்டு வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் போராட்டம்


கூடுதல் பள்ளிக்கட்டிடம் கேட்டு வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 3 July 2018 6:41 AM IST (Updated: 3 July 2018 6:41 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே கூடுதல் பள்ளிக்கட்டிடம் கேட்டு வகுப்புகளை புறக்கணித்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நத்தம்,

நத்தம் அருகே லிங்கவாடியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 197 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியானது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதரம் உயர்த்தப்பட்டது. இருப்பினும் மாணவர்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதிகள் மற்றும் கூடுதலாக வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படவில்லை.

இதனால் மாணவர்கள் இடநெருக்கடியில் படித்து வந்தனர். அதுமட்டுமின்றி மரத்தடியிலும், கலையரங்க வளாகத்திலும் தங்கி படிக்க கூடிய கட்டாய சூழ்நிலை உருவாகி உள்ளது. கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் உயர் அதிகாரிகளுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தனர். ஆனால் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதற்கு பெற்றோர்களும் ஆதரவு தெரிவித்தனர். அதன்படி நேற்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பெற்றோர்களுடன் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டித்தரக்கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பின்னர் தங்களது வீடுகளுக்கு சென்றனர். இதற்கிடையே பள்ளிக்கு மாணவர்கள் யாரும் செல்லாததால் வகுப்பறைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆசிரியர்கள் மட்டுமே வகுப்பறையில இருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் நத்தம் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, போலீஸ்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

Next Story