காமராஜர் பிறந்தநாளுக்கு அரசு விடுமுறை விடவேண்டும், சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை


காமராஜர் பிறந்தநாளுக்கு அரசு விடுமுறை விடவேண்டும், சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை
x
தினத்தந்தி 3 July 2018 7:00 AM IST (Updated: 3 July 2018 7:00 AM IST)
t-max-icont-min-icon

காமராஜர் பிறந்தநாளுக்கு அரசு விடுமுறை விட வேண்டும் என்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் சமத்துவ மக்கள் கழகத்தை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி மக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தின் போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு பிரெய்லி கைகெடிகாரங்கள் மற்றும் கருப்பு கண்ணாடிகள், 7 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவை கலெக்டர் வழங்கினார்.

முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2015-ம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் கொடிநாள் நிதி வசூலாக ரூ.6 லட்சத்து 63 ஆயிரத்து 500 வசூல் செய்த தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவி திட்ட அலுவலர் தண்டபாணிக்கு தமிழக கவர்னரின் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது. இதை தண்டபாணியிடம் மாவட்ட கலெக்டர் வழங்கி பாராட்டினார்.

கூட்டத்தில் அரண்மனைப்புதூரை சேர்ந்த பாலமுருகன் என்பவர் தலைமையில் சிலர் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘தேனியில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவன கிளையில் நாங்கள் பணியாற்றி வந்தோம். மாவட்டம் முழுவதும் மக்களிடம் சிறுசேமிப்பு தொகை வசூல் செய்து நிறுவனத்திடம் ஒப்படைத்தோம். ரூ.3 கோடி அளவுக்கு நிறுவனத்திடம் செலுத்தி உள்ளோம். தற்போது கட்டிய பணத்தை திரும்பப் பெற முடியவில்லை. நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரை தொடர்பு கொண்டாலும் பணம் கிடைக்கவில்லை. எனவே, மக்களிடம் இருந்து நாங்கள் வசூல் செய்து கொடுத்த பணத்தை நிதி நிறுவனத்திடம் இருந்து திரும்பப் பெற்று மக்களிடம் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

பெரியகுளம் காந்திநகரை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘நாங்கள் சொந்த வீடு இல்லாமல் வாழ்கிறோம். இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். ஆனால் அதிகாரிகள், கரடு பகுதி தான் இருப்பதாக கூறி வீட்டுமனை பட்டா கொடுக்க மறுத்து வருகின்றனர். இங்கு குடியிருப்பு பகுதியில் அரசு நிலம் இருக்கிறது. அதில் எங்களுக்கு வீட்டுமனைபட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்ட செயலாளர் ஜெய்முருகேஷ் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ந்தேதி தமிழகம் முழுவதும் அரசு பொது விடுமுறை விட வேண்டும். காமராஜர் புகழ் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி போன்றவை நடத்த வேண்டும். வைகை அணை அருகில் காமராஜருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். தேனி பாரஸ்ட்ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள ரவுண்டானாவில் காமராஜர் சிலை நிறுவ வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கம்பம் ஒன்றிய செயலாளர் அல்லிபாலா கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

தேனி மாவட்ட ஆதிதிராவிடர் தாழ்த்தப்பட்டோர் இந்து புதிரை வண்ணார் சங்கம் சார்பில் கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனுவில், ‘உத்தமபாளையம் தாலுகாவில் புதிரை வண்ணார் சமுதாய மக்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு சாதி சான்றிதழ் இல்லாமல் பரிதவிக்கின்றனர். பெற்றோரிடம் சாதி சான்றிதழ் இருந்த போதிலும், பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் பெற முடியவில்லை. இதனால், பள்ளியில் சேர்க்க முடியாமல் போவதுடன், தொழிலாளர் நல வாரியத்தில் உதவிகள் பெறவும் முடியவில்லை. எனவே, சாதி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

Next Story