வடக்கு பச்சையாறு அணை திட்டத்தில் புதிதாக 11 குளங்களை சேர்க்க வேண்டும் - மனோஜ் பாண்டியன் கோரிக்கை


வடக்கு பச்சையாறு அணை திட்டத்தில் புதிதாக 11 குளங்களை சேர்க்க வேண்டும் - மனோஜ் பாண்டியன் கோரிக்கை
x
தினத்தந்தி 3 July 2018 7:48 AM IST (Updated: 3 July 2018 7:48 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு வடக்கு பச்சையாறு அணை திட்டத்தில் மேலும் 11 குளங்களை புதிதாக சேர்க்க வேண்டும் என்று மனோஜ் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

களக்காடு,

முன்னாள் எம்.பி.யும் அ.தி.மு.க அமைப்பு செயலாளருமான பி.எச்.மனோஜ் பாண்டியன் களக்காடு மஞ்சுவிளை அருகே உள்ள வடக்கு பச்சையாறு அணையை நேற்று மாலை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த அணை அமைவதற்கு முன்பு 1989-ம் ஆண்டு பி.எச்.பாண்டியன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அணை கட்ட வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டதன் மூலம் வடக்கு பச்சையாறு அணை திட்டம் கொண்டு வரப்பட்டது.

தற்போது இந்த அணையின் மூலம் 116 குளங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த அணை திட்டத்தின் கீழ் அம்பை தொகுதிக்கு உட்பட்ட ஆத்தியான் குளம், வடக்கு இடையன்குளம், ஆதிச்சபேரி குளம், கீழமெய்வந்தாள் குளம், மேல மெய்வந்தாள் குளம், கருடம்புளி, கலிங்கநேரி குளம், மேல ஆத்தியான்குளம், சங்குத்தான்குளம், வேலியார்குளம், ஓனாய் குளம் ஆகிய 11 குளங்களையும் புதிதாக சேர்க்க வேண்டும். இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல மடத்துக்கால்வாயில் இருந்து புதிய கால்வாய் அமைக்க வேண்டும் என்றார்.

அவருடன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ராஜேந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ், களக்காடு நகர செயலாளர் செல்வராஜ், பணகுடி நகர பஞ்சாயத்து முன்னாள் தலைவர் லாரன்ஸ் உள்பட பலர் இருந்தனர்.

Next Story