ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் கிராமப் புறங்களில் வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டது.
விழுப்புரம்,
ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவதை நிறுத்த வேண்டும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வை நிரந்தரமாக நிறுத்த உத்தரவு வெளியிட வேண்டும், காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பது உள்பட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
செஞ்சி, வல்லம், மயிலம், உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம் உள்பட மாவட்டத்தில் உள்ள 22 வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் பணியாற்றி வரும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் கிராம ஊராட்சி செயலாளர்கள் வரையிலான அலுவலர்கள், ஊழியர்கள் நேற்று பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களும் அலுவலர்கள், ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் ஒரு சில வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் பூட்டிக்கிடந்தன.
மேலும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த அனைவரும் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பிவிட்டு சென்றனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக கிராமப்புறங்களில் குடிநீர் பணிகள், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப்பணிகள், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டப்பணிகள், தனிநபர் கழிவறை திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story