சேலம் வெள்ளக்குட்டை ஓடையில் மழை வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட 10-ம் வகுப்பு மாணவன் உடல் மீட்பு


சேலம் வெள்ளக்குட்டை ஓடையில் மழை வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட 10-ம் வகுப்பு மாணவன் உடல் மீட்பு
x
தினத்தந்தி 3 July 2018 11:00 PM GMT (Updated: 3 July 2018 7:08 PM GMT)

சேலம் வெள்ளக்குட்டை ஓடையில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 10-ம் வகுப்பு மாணவன் உடல் நேற்று காலை மீட்கப்பட்டது. இதைப்பார்த்து அவனது பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.

சேலம்,

சேலம் கிச்சிபாளையம் அருகே உள்ள நாராயண நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முகமது இசாக். கூலி தொழிலாளி. இவரது மகன் முகமது ஆஷாத் (வயது 16). இவன் அங்கு உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 1-ந்தேதி இரவு சேலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது.

பலத்த மழையினால் சேலம் நாராயண நகர், அஸ்தம்பட்டி, சங்கர் நகர், பெரமனூர், சூரமங்கலம், பொன்னம்மாபேட்டை உள்பட பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நாராயண நகரில் உள்ள ஓடையிலும் தண்ணீர் வெள்ளம்போல கரைபுரண்டு சென்றது.

இந்த நிலையில் அன்று இரவு முகமது ஆஷாத் தனது நண்பர்கள் 3 பேருடன் சேலத்தில் உள்ள ஒரு தியேட்டரில் சினிமா பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தான். அப்போது அங்குள்ள வெள்ளக்குட்டை ஓடையை கடக்கும் போது மாணவன் தவறி அந்த ஓடைக்குள் விழுந்தான். அப்போது அந்த ஓடையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மாணவனை மழை வெள்ளம் அடித்துச்சென்றது.

அப்போது உயிருக்கு போராடிய மாணவன் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று சத்தம் போட்டான். இதைப் பார்த்த அவனது நண்பர்கள் மாணவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. பின்னர் அவர்கள், முகமது ஆஷாத்தின் பெற்றோரிடம் இதுகுறித்து கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று இரவில் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து மறுநாள் காலையில் மீண்டும் தேடினர். அப்போதும் கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து அவர்கள் மாணவனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் சேலம் கருவாட்டுப்பாலம் அருகே உள்ள ராஜவாய்க்காலில் குப்பைகளுக்கு இடையே ஒரு பிணம் கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் சேலம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் கால்வாயில் இறங்கி பார்த்தபோது அங்கு கிடந்தது மாணவன் முகமது ஆஷாத் உடல் என்பது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து மாணவன் உடலை போலீசார் மீட்டனர். மகனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதைப் பார்க்க மிகவும் உருக்கமாக இருந்தது. மாணவன் உடல் மீட்கப்பட்ட தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரணடனர். பின்னர் மாணவன் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மழை வெள்ளத்தில் சிக்கி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story