ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்: அரசு பள்ளிக்கூடத்தில் அதிகாரிகள் அதிரடி விசாரணை தென்காசி அருகே பரபரப்பு
தென்காசி அருகே ஆசிரியர்கள் மீது கூறப்பட்ட பாலியல் புகார் தொடர்பாக அரசு பள்ளிக்கூடத்தில் அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தினர்.
தென்காசி,
தென்காசி அருகே ஆசிரியர்கள் மீது கூறப்பட்ட பாலியல் புகார் தொடர்பாக அரசு பள்ளிக்கூடத்தில் அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பள்ளிக்கூடம்நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ளது சாம்பவர்வடகரை. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,600 மாணவ– மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வித்துறை, காவல்துறை அதிகாரிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சண்முகவேல், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட துணை செயலாளர் வி.பி.மூர்த்தி மற்றும் ஊர் மக்கள் மனு கொடுத்து இருந்தனர்.
கலெக்டர் உத்தரவுஇவர்களது புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷில்பா அதிரடி உத்தரவு பிறப்பித்தார். பொதுமக்களின் புகார் மனுவில் தலைமை ஆசிரியரின் பெயரும் இடம் பெற்று இருந்ததால் உதவி கலெக்டர்கள் நேரடியாக விசாரணையை தொடங்க முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று காலை 11 மணி அளவில் உதவி கலெக்டர்கள் மைதிலி (நெல்லை), சவுந்தர்ராஜ் (தென்காசி), துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், கடையநல்லூர் தாசில்தார் தங்கராஜ், மாவட்ட கல்வி அலுவலர் ஷாஜகான் மற்றும் அதிகாரிகள், போலீசார் சாம்பவர் வடகரை பள்ளிக்கூடத்துக்கு வந்தனர்.
4 மணி நேரம் விசாரணைஅவர்கள் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சேதுராஜ் மற்றும் ஆசிரியர்களிடம் முதலில் விசாரணை நடத்தினர். அதன்பிறகு பள்ளியில் படிக்கும் மாணவிகளை அழைத்து அதிரடியாக விசாரணை நடத்தினர். அப்போது சில மாணவிகளை தனியாக அழைத்து உதவி கலெக்டர் மைதிலி விசாரித்ததாகவும் தெரிகிறது. இந்த விசாரணை சுமார் 4 மணி நேரம் நீடித்தது.
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்ட போது, ஆசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக மாணவிகளிடமும் விசாரணை நடத்தி உள்ளோம். விசாரணை அறிக்கையை கலெக்டரிடம் கொடுப்போம். அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
பரபரப்புஆசிரியர்கள் மீதான பாலியல் புகாரை தொடர்ந்து சாம்பவர் வடகரை பள்ளிக்கூடத்தில் அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.