திருச்சியில் வெவ்வேறு இடங்களில் 2 என்ஜினீயர்களிடம் மடிக்கணினிகள், ரூ.80 ஆயிரம் திருட்டு


திருச்சியில் வெவ்வேறு இடங்களில் 2 என்ஜினீயர்களிடம் மடிக்கணினிகள், ரூ.80 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 4 July 2018 3:45 AM IST (Updated: 4 July 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் வெவ்வேறு இடங்களில் 2 என்ஜினீயர்களிடம் மடிக்கணினிகள் மற்றும் ரூ.80 ஆயிரம் திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

நாகப்பட்டினம் மாவட்டம் பால்பண்ணைசேரி ஆண்டவர் நகரை சேர்ந்தவர் துளசிராமன்(வயது36). என்ஜினீயர். இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கோவை பஸ்கள் நிற்கும் பிளாட்பாரத்தில் வெளியூர் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். கையில் உடைமைகள் அடங்கிய பையும், அதில் ஒரு மடிக்கணினி, ரூ.80 ஆயிரம் ரொக்கப்பணம் வைத்திருந்தார். பஸ் நிலையத்தில் உள்ள பயணிகள் இருக்கையில் அமர்ந்த அவர், அருகில் பையை வைத்திருந்தார். அப்போது, மர்ம ஆசாமி ஒருவர் மடிக்கணினி, ரூ.80 ஆயிரம் பணம் வைத்திருந்த அந்த பையை நைசாக திருடிக்கொண்டு தப்பி சென்று விட்டார்.

பையை காணாமல் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருச்சி கருமண்டபம் திருநகரை சேர்ந்தவர் கோபால்(40). என்ஜினீயர். இவர் நேற்று முன்தினம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் தனது காருக்கு டீசல் போட்டு கொண்டிருந்தார். காரின் பின் இருக்கையில் மடிக் கணினி அடங்கிய பையை வைத்திருந்தார். அப்போது கார் அருகே 35 வயது மதிக்கத்தக்க 2 நபர்கள் வந்து, மடிக் கணினியை திருடிக்கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story